Tamil Nadu police advisory : தமிழ்நாடு காவல்துறை, இணையவழி மோசடி குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீட்டு மோசடியில் ஈடுபட்ட 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட இருவேறு இணையவழி குற்ற வழக்குகளில் தொடர்புடைய மேற்கு வங்கத்தைச் சார்ந்த மூன்று நபர்களை இணையவழி குற்றப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் மோசடி கும்பலின் நடவடிக்கைகள் குறித்த விரிவான விசாரணையைத் தொடர்ந்து இந்த கைதுகள் செய்யப்பட்டன.
Add Zee News as a Preferred Source
ஒரு ஆன்லைன் பங்கு வர்த்தக முதலீட்டு மோசடி பொதுவாக நியாயமானதாக தோன்றும் வாட்ஸ்அப் குழுக்களில் தனிநபர்களைச் சேர்ப்பதன் மூலம் தொடங்குகிறது. இந்த குழுக்களில் பெரும் இலாபங்களைக் காட்டும் போலி சான்றுகள் பல பகிரப்படும். நம்பிக்கையை வளர்க்க, மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் ஆரம்ப முதலீடுகளுக்கு சிறிய வருவாயை வழங்குகிறார்கள். மக்களின் நம்பிக்கையைப் பெற்று, அதிக தொகையை முதலீடு செய்தவுடன், மோசடி செய்பவர்கள் மறைந்துவிடுகிறார்கள். இதன் விளைவாக பெரும் நிதி இழப்பு ஏற்படுகிறது.
முதல் வழக்கில், புகார்தாரர் உண்மையான வர்த்தக தளம் என்று நம்பி பேஸ்புக்கில் இருந்து ஒரு இணைப்பைக் கிளிக் செய்து, பெரும் வருவாயை தரும் என்ற மோசடி செய்பவரின் வார்த்தைகளை நம்பி ரூபாய் 1.64 கோடிமுதலீடு செய்தார். பி. என். எஸ் சட்டத்தின் 318 (4), 336 (2) (3) பிரிவுகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (திருத்த) சட்டத்தின் 66 டி மற்றும் 74 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கை மாநில இணையவழி குற்ற விசாரணை மையம் பதிவு செய்தது. இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி, சஹசாதா ஹொசைன் (23), த/பெ அலி ஹொசைன், 141, காமதி சங்க்ரபந்தா, கூச் பெஹார், மேற்கு வங்காளம் என்பவரை காவல் ஆய்வாளர் தலைமையிலான சிறப்புக் குழு 21.08.2025 அன்று கைது செய்தது.
பங்களாதேஷ் எல்லையிலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு இடத்தில் அவர் கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் இந்த வழக்கில் சம்பத்தப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளர் ஆவார். அந்த வங்கிகணக்கை ஆய்வு செய்தபோது, அவர் இந்தியா முழுவதும் தேசிய இணையவழி அறிக்கையிடல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட 29 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த மூன்று குற்றவாளிகளை தமிழ்நாட்டின் இணையவழி குற்றப் பிரிவு கைது செய்தது தொடர்பான 2வது வழக்கில், புகார்தாரர் வாட்ஸ்அப் வழியாக ஒரு ஆன்லைன் முதலீட்டு செயலியில் அதிக வருவாயை உறுதியளித்ததை அடுத்து, 50 லட்சம் ரூபாய் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதாகக் கூறி ஏமாற்றப்பட்டார். இது தொடர்பாக, மாநில இணையவழி குற்ற விசாரணை மையத்தில் தகுந்த பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையின் அடிப்படையில், இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி, அமித் சஹா (24), த/பெகணேஷ் சஹா, ஸ்ரீபூர், ஹரி மந்திர் சாலை, ஹப்ரா, வடக்கு 24 பர்கானாஸ், மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டார். இவர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளர் ஆவார். அந்த வங்கிகணக்கை ஆய்வு செய்தபோது, இந்தியா முழுவதும் தேசிய இணையவழி அறிக்கையிடல் தளத்தில் பதிவு செய்யப்பட்ட 35 வழக்குகளில் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மற்றொருவர் போலி வங்கிக் கணக்கு முகவர், கமலேஷ் தேப்நாத் (36), த/பெநிர்மல் தேப்நாத், மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ், பனிப்பூர், சைதன்யா சாலை,கமிஷனுக்காக போலி வங்கிக் கணக்குகளை வாங்கும் வங்கிக் கணக்கு முகவராக செயல்படுகிறார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் நடந்து வருகின்றன.
பொதுமக்களுக்கு அறிவுரை:
1. வாட்ஸ்அப் அல்லது சமூக ஊடகங்களில் முதலீடு அல்லது வர்த்தக குழுக்களில் சேர கோரப்படாத அழைப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
இந்த குழுக்களில் பகிரப்பட்ட சான்றுகள் அல்லது செய்திகளை மட்டுமே நம்ப வேண்டாம், ஏனெனில் அவை பெரும்பாலும் தவறான நம்பிக்கை உணர்வை உருவாக்குவதற்காக புனையப்படுகின்றன.
2. உத்தியோகபூர்வ ஒழுங்குமுறை அமைப்புகள் மூலம் வர்த்தக தளம் அல்லது நிதி ஆலோசகரின் நற்சான்றிதழ்கள் மற்றும் நியாயத்தன்மையை சரிபார்க்காமல் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்க்கவும்.
3. உங்கள் தனிப்பட்ட வங்கி அல்லது நிதி விவரங்களை ஆன்லைனில் அறியப்படாத நபர்கள் அல்லது குழுக்களுடன் ஒருபோதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆரம்ப சிறிய வருமானங்களைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் பெரிய தொகைகளை முதலீடு செய்ய உங்களை கவர்ந்திழுக்க இவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
4. பதிவுசெய்யப்பட்ட பங்கு தரகு நிறுவனங்கள் பற்றி தெரிந்து கொள்ள எப்போதும் செபி வலைத்தளத்ளத்தில் https://www.sebi.gov.in/sebiweb/other/OtherAction.do?doRecognised=yes சரிபார்க்கவும்.
5. எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன் எப்போதும் முழுமையான ஆராய்ச்சியை மேற்கொண்டு நம்பகமான நிதி நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் மொபைல் எண், சிம் கார்டு அல்லது வங்கிக் கணக்கைப் பயன்படுத்த மற்றவர்களை அனுமதிக்காதீர்கள், ஏனெனில் அவை சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு தவறாகப் பயன்படுத்தப்படலாம்.
6. எந்தவொரு காரணத்திற்காகவும் வேறு எந்த நபருக்கும் உங்கள் வங்கிக் கணக்கை கடன் வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
7. புகார் அளிக்க: நீங்கள் ஏதேனும் இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று நீங்கள் சந்தேகித்தால் அல்லது ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டறிந்தால், உடனடியாக நடவடிக்கை எடுப்பது முக்கியம். நிதி மோசடிகள் ஏற்பட்டால் இணையவழி கிரைம் உதவி எண் 1930ஐ டயல் செய்யவும் அல்லது www.cybercrime.gov.in in இல் புகார் அளிக்கவும்.
About the Author
S.Karthikeyan