ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் பல சர்ச்சைகளும் எழுந்தது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனும், ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனுமான ஷுப்மன் கில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அவர் வரவிருக்கும் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் ஆசிய கோப்பைக்கு முன்பு உடல் தகுதியை பரிசோதிக்க கில் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளார்.
Add Zee News as a Preferred Source
சுப்மான் கில் விளையாடுவாரா?
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இந்தியா திரும்பிய வீரர்கள், ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகு, மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு தயாராகி வருகின்றனர். ஆகஸ்ட் மாதம் முழுவதும் ஒரு போட்டியில் கூட வீரர்கள் யாரும் விளையாடவில்லை. சிலர் மட்டும் உள்ளூர் தொடர்களில் விளையாடி வருகின்றனர். பிசிசிஐ-யின் விதிமுறைகளின்படி, ஒரு பெரிய தொடருக்கு முன்பு அனைத்து வீரர்களும் தங்களது உடல் தகுதியை நிரூபிக்க, தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் உடற்தகுதி சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்த நிலையில், ஷுப்மன் கில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி தொடங்கிய துலீப் டிராபி தொடரின் முதல் போட்டியிலிருந்து அவர் விலகினார். அவருக்கு பதிலாக, வடக்கு மண்டல அணியின் துணை கேப்டனான அங்கித் குமார், அந்த அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பையில் சிக்கல்?
ஷுப்மன் கில்லுக்கு எடுக்கப்பட்ட இரத்த பரிசோதனை முடிவுகளில், கவலை படும்படியாக எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, அவர் விரைவில் முழுவதும் குணமடைந்து பயிற்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அவர் முழுமையான உடற்தகுதியை எட்டுவது மிகவும் முக்கியம். தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடைபெறும் பரிசோதனைகளுக்கு பிறகே, ஆசிய கோப்பையில் அவர் பங்கேற்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பிசிசிஐ வட்டாரங்கள் கூறுகின்றன.
ஷுப்மன் கில்லை போலவே, இங்கிலாந்து தொடரில் பங்கேற்ற மற்ற வீரர்களான குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோரும் தங்களது வழக்கமான உடற்தகுதி பயிற்சிகளுக்காக தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளனர். ஹர்திக் பாண்டியா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் தங்களது உடற்தகுதியை சோதிக்க அகாடமிக்கு வந்து சென்றுள்ளனர். முகமது சிராஜும் விரைவில் அவர்களுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில், வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட இந்திய அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பந்த், ஆசிய கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. அவரும் விரையில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், லார்ட்ஸ் டெஸ்டில் காயமடைந்த நிதிஷ் குமார் ரெட்டியும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பயிற்சிகளை முடித்து வெளியேறி இருந்தார்.
About the Author
RK Spark