‘கொழுந்தியாளை விரும்புகிறேன்…’ திருமணம் செய்து வைக்க கோரி வாலிபர் விநோத போராட்டம்

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் சக்சேனா. இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் கடந்த 2021-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த பெண் உடல்நலக்குறைவு காரணமாக அடுத்த ஆண்டு உயிரிழந்தார். இதையடுத்து, மனைவியின் சகோதரியை ராஜ் சக்சேனா திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணுடன் இரண்டு ஆண்டுகளாக ராஜ் சக்சேனா குடும்பம் நடத்தி வந்தார்.

இந்நிலையில் தனது மனைவியின் மற்றொரு தங்கை மீது அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது. இந்த காதல் விவகாரம் குறித்து தனது மனைவியிடமே ராஜ் சக்சேனா வெளிப்படையாக கூறியிருக்கிறார். மேலும், தனது கொழுந்தியாளை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன ராஜ் சக்சேனாவின் மனைவி, அவரை கடுமையாக திட்டி வாக்குவாதம் செய்துள்ளார். தனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டாலும், ராஜ் சக்சேனா தனது கொழுந்தியாள் மீது கொண்ட காதலில் உறுதியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், அமிதாப் பச்சன் நடித்த ‘ஷோலே’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல், மின்சார கோபுரத்தின் மீது ஏறி, ‘எனது கொழுந்தியாளை காதலிக்கிறேன். அவரை எனக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்று கத்தி கூச்சலிட்டு போராட்டம் நடத்தியுள்ளார். அவரது இந்த விநோத போராட்டத்தைக் கண்டு குடும்பத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ராஜ் சக்சேனாவை சமாதானம் செய்ய முயன்றனர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சமாதான பேச்சுவார்த்தை நீடித்தது. இறுதியாக அவரது மனைவியின் தங்கையை அவருக்கு திருமணம் செய்து வைப்பதாக உறுதி அளிக்கப்பட்ட பிறகே, ராஜ் சக்சேனா கீழே இறங்கி வந்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எனது கொழுந்தியாளும் என்னை காதலிக்கிறார். நானும் அவரை விரும்புகிறேன். எங்கள் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும்’ என்று கூறினார். இந்நிலையில், அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவரது குடும்பத்தினர் குழப்பமடைந்துள்ளனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.