மாஸ்கோ:
உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்களை பாதித்து வரும் புற்றுநோய்க்கு எதிராக புதிய நம்பிக்கை எழுந்துள்ளது. அதாவது, ரஷியாவின் புற்றுநோய் தடுப்பூசி 100 சதவீத செயல் திறனை காட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா கண்டறிந்துள்ள இந்த தடுப்பூசி எம்.ஆர்.என்.ஏ வகையைச் சேர்ந்ததாகும். ‘என்ட்ரோமிக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசி புற்றுநோய் கட்டிகளை வெற்றிகரமாக அழித்ததாகவும், ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும், இந்த தடுப்பூசி பொதுப் பயன்பாட்டுக்கு விடப்படும் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தடுப்பூசி ஏற்கனவே ரஷியாவில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புற்றுநோயியல் மையங்களில் ஆரம்பகட்ட மருத்துவப் பயன்பாட்டில் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசிக்கு பயன்படுத்தப்பட்ட அதே எம்.ஆர்.என்.ஏ நுட்பமே இந்த தடுப்பூசிக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நோயாளிக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அடுத்த தலைமுறை நோயெதிர்ப்பு சிகிச்சையாக இது இருக்கும் எனவும், கீமோதெரபி அல்லது கதிர்வீச்சு சிகிச்சையைப் போல அல்லாமல் ஆரோக்கியமான திசுக்களை சேதப்படுத்தாமல், புற்றுநோய் செல்களை துல்லியமாக குறிவைத்து அழிக்கும் திறன் கொண்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சோதனைகளின் போது கடுமையான பக்கவிளைவுகள் எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.