புதுடெல்லி,
டெல்லி கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விகாஸ் திரிபாத் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி 1983-ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்றதாகவும், ஆனால் அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே 1980-ம் ஆண்டில் டெல்லி தொகுதியின் வாக்காளராக அவரது பெயர் சேர்க்கப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார். எனவே, இதுதொடர்பாக விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர் கோரினார்.
இந்த மனு, மாஜிஸ்திரேட் வைபவ் சவுரசியா முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வக்கில் பவன் நரங், ‘‘தேர்தல் கமிஷன், தவறை கண்டுபிடித்ததால்தான், கடந்த 1982-ம் ஆண்டு சோனியா காந்தி பெயரை நீக்கியது. 1983-ம் ஆண்டு இந்திய குடியுரிமை பெற்ற பிறகுதான் மீண்டும் அவரது பெயர் சேர்க்கப்பட்டது’’ என்று கூறினார். பின்னர், மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் கூறினார்.