டார்ரங்: பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அசாமின் டார்ரங்கில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “நமது துணிச்சலான ராணுவ வீரர்களுடன் நிற்பதற்குப் பதிலாக, ஊடுருவல்காரர்களையும் இந்தியாவின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது. பாகிஸ்தானால் வளர்க்கப்படும் பயங்கரவாதிகளை தேசவிரோத சக்திகளுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் தேசவிரோத சக்திகளுக்கு பாதுகாப்பு அளித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு எனது முதல் அசாம் பயணம் இதுவாகும். காமாக்யா அம்மனின் ஆசியுடன், ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றது. இன்று, இந்த புனித பூமியில் இருப்பதன் மூலம் நான் ஒரு தெய்வீக தொடர்பை அனுபவிக்கிறேன்.
செங்கோட்டையில் சுதந்திர தின உரையில், நான் சக்ரதாரி மோகனை நினைவு கூர்ந்தேன். இன்று, இந்த புனிதமான சந்தர்ப்பத்தில், தேசிய பாதுகாப்பிற்கான சுதர்சன சக்கரம் எனும் வான் பாதுகாப்பு அமைப்பு பற்றிய நமது இலட்சியத்தை நான் மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
2035 ஆம் ஆண்டுக்குள், இந்த சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு அமைப்பை நவீனப்படுத்தி, வலுப்படுத்துவோம். இது பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து நம்மைக் காப்பது மட்டுமல்லாமல், தீர்க்கமாக பதிலடியும் கொடுக்கும்” என்று தெரிவித்தார்.