இந்தியா 'ஏ'- ஆஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் டிரா

லக்னோ,

இந்தியா ‘ஏ’- ஆஸ்திரேலியா ‘ஏ’ அணிகள் இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் கிரிக்கெட் (4 நாள்) போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய ‘ஏ’ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 532 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. சாம் கான்ட்ஸ்டாஸ் (109 ரன்), ஜோஷ் பிலிப் (123 ரன்) சதம் அடித்தனர். இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய ‘ஏ’ அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் இரவு பெய்த மழையால் மைதானத்தில் ஈரப்பதம் இருந்ததால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து பேட் செய்த தமிழக வீரர் ஜெகதீசன் 64 ரன்னில் சேவியர் பார்லெட் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் ஜோஷ் பிலிப்பிடம் சிக்கினார். மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் 73 ரன்னில் கூப்பர் கனோலி பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (8 ரன்) வந்த வேகத்திலேயே வெளியேறினார்.

இதைத்தொடர்ந்து விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல், தேவ்தத் படிக்கல்லுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர். ஆட்ட நேரம் முடிவில் இந்திய ‘ஏ’ அணி 4 விக்கெட்டுக்கு 403 ரன்கள் குவித்தது. தேவ்தத் படிக்கல் 86 ரன்களுடனும் (178 பந்து, 8 பவுண்டரி), முதல்தர கிரிக்கெட்டில் தனது 2-வது சதத்தை அடித்த துருவ் ஜூரெல் 113 ரன்களுடனும் (132 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர் . இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது.

தொடர்ந்து இருவரும் சிறப்பாக ஆடினர் . நிலைத்து ஆடிய படிக்கல் சதமடித்து அசத்தினார் .பின்னர் துருவ் ஜுரேல் 140 ரன்களும், படிக்கல் 150 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து 7 விக்கெட் இழப்பிற்கு 531 ரன்கள் எடுத்திருந்த போது இந்திய அணி டிக்ளேர் செய்தது. பின்னர் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்திருந்தபோது 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.