“அனைவருக்கும் நன்றி!” – 2 ஆண்டுகளுக்குப் பின் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான ஆசம் கான்

லக்னோ: “அனைவருக்கும் நன்றி. ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆசிர்வாதம்” என 2 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு ஜாமீனில் வெளிவந்துள்ள சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசம் கான் தெரிவித்துள்ளார்.

ஆசம் கானுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அந்த வழக்குகளுக்காக அவர் கைது செய்யப்பட்டார். ஒவ்வொரு வழக்கில் இருந்தும் ஜாமீன் பெற்ற ஆசம் கான், இறுதியாக குவாலிட்டி பார் (Quality Bar) நில ஆக்கிரமிப்பு வழக்கிலும் சமீபத்தில் ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து ஆசம் கான், சீதாபூர் சிறையில் இருந்து இன்று விடுவிக்கப்பட்டார்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ஆசம் கானை சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் சிவபால் யாதவ் வரவேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆசம் கான், “அனைவருக்கும் நன்றி. ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது ஆசிகள்” என தெரிவித்தார்.

ஆசம் கான் பகுஜன் சமாஜ் கட்சயில் இணைய இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆசம் கான், “இத்தகைய ஊகங்களைச் செய்தவர்களால் மட்டுமே இதற்கு விளக்கம் அளிக்க முடியும். நான் சிறையில் யாரையும் சந்திக்கவில்லை. தொலைபேசியை பயன்படுத்த எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, கடந்த 2 ஆண்டுகளாகவே நான் தொடர்பு இலக்குக்கு அப்பால்தான் இருந்து வருகிறேன்” என குறிப்பிட்டார்.

ஆசம் கான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர் மீதான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப் பெறப்படும் எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.