ஜி.கே.மணி பதவி பறிப்பு: பாமக சட்டப்பேரவை குழு தலைவராக வெங்கடேஸ்வரன் நியமனம்!

சென்னை: பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என பாமக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்தார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாமக செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞர் கே.பாலு, “பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக செயல்பட்டு வந்த ஜி.கே.மணியை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்து, தருமபுரி எம்எல்ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன் பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைத்தலைவராக மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல, பாமக சட்டப்பேரவை குழு கொறடாவாக மயிலம் எம்எல்ஏ சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாமக அரசியல் தலைமைக்குழு கூட்டத்தில், பாமக சட்டப்பேரவைக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தெரிவிக்கப்பட்டு, அதற்கு தலைமைக்குழு ஒப்புதல் வழங்கியது. அதன் கடிதத்தை இன்று சட்டப்பேரவை செயலாளரிடம் வழங்கினோம்.

மேலும், கடந்த ஜூலை 3 அன்று பாமகவின் விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை கொறடா பொறுப்பிலிருந்து நீக்கி, சிவக்குமாரை கொறடாவாக நியமிக்கும் கடித்ததை கொடுத்தோம். அதற்கு இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை. இது தொடர்பாகவும் இன்று ஒரு கடிதத்தை கொடுத்துள்ளோம்.

பாமக பொதுக்குழுவில், தலைவர் அன்புமணி உள்ளிட்டோரின் பதவிக்காலத்தை ஆகஸ்ட் 2026 வரை நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மான நகல் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையமும் அதனை அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளது. அதன் நகலையும் சட்டப்பேரவை செயலாளரிடம் கொடுத்துள்ளோம். மாம்பழம் சின்னமும், அதேபோல தேர்தலில் வேட்பாளருக்கு சின்னத்துக்காக கையொப்பம் இடும் அதிகாரமும் அன்புமணிக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ளது. பாமகவில் உள்ள அனைவரும் அன்புமணி தலைமையில் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.

தற்போதைய கடிதத்தின் படி, வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாமக சட்டப்பேரவை குழு தலைவர் வெங்கடேசனுக்கு இருக்கை ஒதுக்கப்பட வேண்டும். ஜி.கே.மணி பாமகவில் 25 ஆண்டுகளாக தலைவராக இருந்தவர், அனைத்து தேர்தலிலும் போட்டியிட்டவர். கட்சிக்காக நிறைய உழைத்தவர். அவர் சமீபத்தில் கட்சிக்கு எதிராக சொல்லும் கருத்துகள் வருத்தமளிக்கிறது. எனவே அவரை சட்டப்பேரவை குழு தலைவர் பொறுப்பிலிருந்து மட்டும் விடுவித்துள்ளோம், கட்சியிலிருந்து நீக்கவில்லை” என்றார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.