புதுடெல்லி,
இந்திய விமானப்படைக்கு 97 இலகு ரக தேஜாஸ் போர் விமானங்கள் வாங்க இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்துடன் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதில் 68 விமானங்கள் ஒற்றை இருக்கை கொண்டவையாகவும், 29 போர் விமானங்கள் இரட்டை இருக்கை கொண்டவையாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.62,370 கோடியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்து இருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த போர் விமானங்களை வாங்குவதற்காக, அதனை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தானது. போர் விமானங்கள் விமானப்படையிடம் ஒப்படைக்கும் பணி 2027 – 2028 துவங்கி அடுத்த ஆறு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.