ஆசிய கோப்பை 2025ன் பரபரப்பான இறுதி போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்திய மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா. பாகிஸ்தான் பக்கம் இருந்த இந்த வெற்றியை இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வென்று கொடுத்துள்ளனர். ஆனால், வெற்றிக்கு பிந்தைய பரிசளிப்பு விழாவில் இந்திய அணி, கோப்பையை ஏற்க மறுத்ததால் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய சர்ச்சை வெடித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையை பெற இந்திய வீரர்கள் மறுத்ததே, இந்த சர்ச்சைக்கு அடிப்படை காரணம்.
Add Zee News as a Preferred Source
pic.twitter.com/bvvqz1ksas
— CricketGully (@thecricketgully) September 28, 2025
குழப்பத்தில் முடிந்த பரிசளிப்பு விழா
பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா 9வது முறையாக ஆசிய கோப்பையை வென்றது. ஆனால், வெற்றிக்கு பிந்தைய கொண்டாட்டங்கள் பெரும் குழப்பத்துடனேயே தொடங்கின. இறுதி போட்டி முடிந்த பிறகு, சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக, பாகிஸ்தான் வீரர்கள் தங்களது அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், பரிசளிப்பு விழா தொடங்குவதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் என்ற முறையில், மொஹ்சின் நக்வி தான் வெற்றி கோப்பையை வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், அவரிடம் இருந்து கோப்பையை பெற இந்திய அணி வீரர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். அவர்கள், விழா மேடைக்கு வராமல் சிறிது தூரத்திலேயே நின்றுகொண்டனர்.
மொஹ்சின் நக்வி மேடைக்கு வந்தபோது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள், “பாரத் மாதா கி ஜೈ” என்று முழக்கமிட்டனர். அதே நேரத்தில், பாகிஸ்தான் வீரர்கள் தங்களது பதக்கங்களை வாங்க வந்தபோது, ரசிகர்கள் அவர்களை கேலி செய்து கூச்சலிட்டனர். இந்த நிலைமை மேலும் மோசமடைவதை உணர்ந்த விழா ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அதிகாரிகள், “இந்திய அணி, இந்த மேடையில் கோப்பையை பெறாது” என்று அறிவித்து, பரிசளிப்பு விழாவை பாதியிலேயே முடித்துக்கொண்டனர்.
இந்தியா புறக்கணித்ததற்கான பின்னணி என்ன?
இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அரசியல் பதட்டங்களே, இந்த புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம் ஆகும். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருக்கும் மொஹ்சின் நக்வி, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவராக உள்ளார். இந்த தொடரின் போது, இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ், இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததற்காக, அவருக்கு எதிராக ஐசிசியிடம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நக்வி கோரியிருந்தார். இது, இந்திய அணி வீரர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே, இந்த தொடர் முழுவதும், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதையும், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதையும் இந்திய வீரர்கள் தவிர்த்து வந்தனர். அதன் உச்சகட்டமாகவே, நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்க மறுத்துள்ளனர். வெற்றியை கொண்டாடும் ஒரு தருணம், அரசியல் பதட்டங்களால் ஒரு சர்ச்சை நிறைந்த நிகழ்வாக மாறியது, கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக பதிவாகியுள்ளது. இருப்பினும் இந்திய அணி வீரர்கள் கோப்பையை வாங்காமலேயே மைதானத்தில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
About the Author
RK Spark