பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சியில்… 1 நிமிடம் வரை கைகூப்பியபடி காணப்பட்ட நிதீஷ் குமார்; கிளம்பியது புதிய சர்ச்சை

பாட்னா,

நாடு முழுவதும் ஐ.டி.ஐ. மாணவர்களுக்கு காணொலி காட்சி வழியே பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மாணவர்களுக்கு பிரதமர் மோடி சான்றிதழ்களை வழங்கினார். இதில், பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் கலந்து கொண்டார்.

அப்போது அவர், பார்வையாளர்களை கவரும் வகையில் காணப்பட்டார். ஒருவர் நிகழ்ச்சி விவரங்களை படித்து கொண்டிருந்தபோது, ஏறக்குறைய ஒரு நிமிடம் வரை, நிதீஷ் குமார் கைகளை கூப்பியபடி அமர்ந்து இருந்தார். அவ்வப்போது லேசாக கூப்பிய கைகளை குலுக்கினார். பக்கவாட்டிலும் ஒருமுறை பார்த்து கொண்டார். ஒரு கட்டத்தில், லேசாக புன்னகை புரிந்தபடியும் காணப்பட்டார்.

இது சர்ச்சையாகி உள்ளது. பீகாரில் ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரான அவர், பொதுவெளியில் இதுபோன்று நடப்பதற்காக எதிர்க்கட்சியினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவருடைய ஆரோக்கியம் பற்றி கேள்வி எழுப்பும் அவர்கள், பீகாரை அவரால் வழிநடத்தி செல்ல முடியுமா? என்றும் கேட்கின்றனர்.

பாட்னா நகரில் கடந்த மார்ச்சில் தேசிய கீதம் இசைத்தபோது, சிரித்து கொண்டும், பேசியபடியும் காணப்பட்டார். இது கேமராவில் பதிவாகி இருந்தது. அவரை முதன்மை செயலாளர் தீபக் குமார் அமைதிப்படுத்தினார்.

இதேபோன்று, நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட பின்னர், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களிடம் கைகுலுக்க சென்றார். இதுபோன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் அவருடைய நடவடிக்கைகள் சர்ச்சையாகி இருந்தன.

எனினும், எதிர்க்கட்சிகளின் பல்வேறு கேள்விகளை அவருடைய கட்சியும், கூட்டணியான பா.ஜ.க.வும் அவரை பாதுகாக்கும் வகையில் பேசினர். கடந்த மே மாதத்தில், மரக்கன்று ஒன்றை அதிகாரி கொடுத்தபோது, அதனை விளையாட்டாக அவருடைய தலையில் வைத்த நிகழ்வையும் எதிர்க்கட்சிகள் சர்ச்சையாக்கின.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.