“இனி ஒரு தலைவராக…” – விஜய்க்கு கமல்ஹாசன் எம்.பி அறிவுரை

கரூர்: “கரூர் சம்பவத்தை பொறுத்தவரை, காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்ய வேண்டும்” என்று தவெக தலைவர் விஜய்க்கு மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி அறிவுறுத்தியுள்ளார்.

கரூரில் தவெக பிரச்சாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக மநீம தலைவர் கமல்ஹாசன் எம்பி இன்று கரூர் வந்தார். அப்போது, சம்பவம் நடந்த வேலுசாமிபுரம், தவெகவினர் ஏற்கெனவே அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் முனை, உழவர் சந்தை ஆகிய இடங்களை பார்வையிட்டார்.

பின்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில், உயிரிழந்த 2 வயது சிறுவன் துரு விஷ்ணுவின் வீட்டுக்குச் சென்ற கமல்ஹாசன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் கமல்ஹாசன் கூறியது: “இந்த சம்பவத்தில் யாரையும் குற்றம் சுமத்த முடியாது. இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

நீங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதால், சில விஷயங்கள் நீதி வழங்குவதற்கு ஏதுவாக, சில உண்மைகள் வெளிவர உங்கள் பணியும் காரணமாக இருந்துள்ளது. சம்பவம் நடந்ததை கேள்விப்பட்ட உடன் மருத்துவமனைக்கு சென்று உரிய நடவடிக்கை எடுத்த செந்தில் பாலாஜிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் ஏன் வந்தார், எப்படி வந்தார் என கேட்க வேண்டாம். இது அவரது ஊர், அவருடைய மக்கள். அவர் வராமல் வேறு யார் வருவார். இன்னும் உயிர்சேதம் ஏற்படாமல் செந்தில் பாலாஜி உதவியுள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அதுகுறித்து கருத்து எதுவும் சொல்லக் கூடாது. மிக சிறப்பான தலைமை பண்புடன் நடந்து கொண்டு, முதல்வர் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இனிமேல் இதுபோன்ற தவறு நடக்கக் கூடாது. அதற்கு அழுத்தமாக சட்டங்கள் அமைய வேண்டும். நான் பேசுவது மனிதம், எதிர்க்கட்சிகள் பேசுவது அரசியல். இப்போது அதற்கு நேரமல்ல, இனி வரும் காலங்களில் பேசிக் கொள்ளலாம். எவ்வளவு பணம் கொடுத்தாலும், போன உயிர் திரும்பாது. பணம் எவ்வளவு கொடுத்தது என்ற போட்டி வேண்டாம்.

மனிதாபிமானம் காட்ட வேண்டிய நேரம். காலம் கடந்து அறிவுரை சொல்ல முடியாது. இனி ஒரு தலைவராக செய்யவேண்டியதை அவர் செய்யவேண்டும். இப்போது யாரையும் சாடும் நேரமில்லை” என்று கமல்ஹாசன் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.