“மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கான பதிலடி முடிவை கைவிட யார் காரணம்?” – பிரதமர் மோடி கேள்வி

மும்பை: 2008-ல் மும்பை தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் மீதான தாக்குதல் முடிவை கைவிட யார் காரணம் என்பதை காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.

நவி மும்பையில் ரூ.19,650 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தின் முதலாவது முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்தார். இந்தியாவின் மிகப் பெரிய பசுமை விமான நிலையத்திட்டமான இது, 1160 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்டது. உலகின் மிகவும் திறன்மிக்க விமான நிலையங்களில் ஒன்றாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், ஆண்டுதோறும் 9 கோடி பயணிகளையும் 32.5 லட்சம் மெட்ரிக் டன் சரக்குகளையும் கையாளும் திறன் கொண்டது.

மும்பையில் ஏற்கனவே சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம் உள்ள நிலையில், இந்த புதிய விமான நிலையம் அத்துடன் இணைந்து செயல்படும். பல விமான நிலையங்களைக் கொண்ட நகரங்களில் ஒன்றாக மும்பையை இது மாற்றும். இந்த விமான நிலையத்தை திறந்து வைப்பதற்காக இன்று மாலை மும்பை வந்த பிரதமர் மோடி, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து, நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார். மேலும், ரூ.37,270 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்டுள்ள மும்பை மெட்ரோ பாதை -3 ன் 2பி முனையத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் திறன், வேலைவாய்ப்பு, தொழில்முனைவு, புதுமை கண்டுபிடிப்புத் துறை மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட குறுகிய கால வேலைவாய்ப்புத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, “இன்று முழு நாடும் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்கப் பாடுபடுகிறது. வளர்ச்சி அடைந்த இந்தியா என்பது உத்வேகம், முன்னேற்றம் இரண்டும் உள்ள ஒன்றாகும். நவி மும்பை சர்வதேச விமான நிலையம், வளர்ச்சி அடைந்த இந்தியாவை பிரதிபலிக்கும் ஒரு திட்டமாகும். இந்த புதிய விமான நிலையத்தின் மூலம் மகாராஷ்டிராவில் உள்ள விவசாயிகள், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சந்தைகளுடன் இணைவார்கள். இது முதலீடு மற்றும் புதிய வணிக வாய்ப்புகளை இந்த பகுதிக்கு ஈர்க்கும்.

மும்பை நாட்டின் பொருளாதார தலைநகரம் மட்டுமல்ல, இந்தியாவின் மிகவும் துடிப்பான நகரங்களில் ஒன்று. 2008-ல் பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கியதற்கு இதுவே காரணம். ஆனால், அப்போதைய காங்கிரஸ் அரசு பலவீனத்தின் செய்தியை வழங்கியது.

சமீபத்தில் இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான ஒருவர் (ப.சிதம்பரம்), மும்பைத் தாக்குதலுக்குப் பிறகு நமது பாதுகாப்புப் படைகள், பாகிஸ்தானைத் தாக்க தயாராக இருந்தன. ஆனால், வேறொரு நாட்டின் அழுத்தம் காரணமாக அப்போதைய காங்கிரஸ் அரசு நமது பாதுகாப்புப் படைகளைத் தடுத்தது என கூறியுள்ளார். ஒரு வெளிநாட்டு சக்தியின் அழுத்தத்தின் கீழ் யார் இந்த முடிவை எடுத்தார்கள் என்பதை காங்கிரஸ் சொல்ல வேண்டும். நாடு அதை தெரிந்துகொள்ள உரிமை உண்டு.

காங்கிரஸின் பலவீனம், பயங்கரவாதிகளைப் பலப்படுத்தியது. இந்த தவறுக்கு நாடு மீண்டும் மீண்டும் உயிர் தியாகம் செய்ய வேண்டியிருந்தது. எங்களைப் பொறுத்தவரை, தேசியப் பாதுகாப்பு மற்றும் நமது குடிமக்களின் பாதுகாப்பைவிட வேறு எதுவும் முக்கியமில்லை” என தெரிவித்தார்.

காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய முற்போக்கு கூட்​டணி ஆட்​சி​யில், கடந்த 2008, நவம்​பர் 26-ம் தேதி மும்​பை​யின் முக்​கிய இடங்​களில் பாகிஸ்​தானை சேர்ந்த லஷ்கர்​-இ-தொய்பா தீவிர​வா​தி​கள் கொடூர தாக்​குதல் நடத்​தினர். இதில் 166 பேர் உயி​ரிழந்​தனர், 300-க்​கும் மேற்​பட்​டோர் காயம் அடைந்​தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.