விசாகப்பட்டினம்,
13-வது பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், 2-வது ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் பதம் பார்த்தது. ஆனால் இந்தியாவுக்கு இனிதான் உண்மையான சவால் ஆரம்பிக்கப்போகிறது. அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற அரையிறுதி வாய்ப்புக்குரிய அணிகளுடன் மல்லுக்கட்ட வேண்டி உள்ளது.
இதில் துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்தியா வெற்றி கண்டாலும் மிடில் வரிசையில் விக்கெட் சரிவு பலவீனமாக பார்க்கப்படுகிறது. அத்துடன் பீல்டிங்கும் மெச்சும்படி இல்லை. பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 4-5 கேட்ச் வாய்ப்புகளை நழுவ விட்டனர். இத்தகைய குறைபாடுகளை சரி செய்ய வேண்டியது அவசியமாகும்.
அண்மையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் 50 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த தொடக்க ஆட்டக்காரரான ஸ்மிர்தி மந்தனா, நடப்பு தொடரில் எதிர்பார்ப்புக்கு ஏற்ப (8 மற்றும் 23 ரன்) ஜொலிக்கவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் அவர் ரன்வேட்டை நடத்தினால் அணிக்கு அனுகூலமாக இருக்கும். பந்து வீச்சில் தீப்தி ஷர்மா, கிரந்தி கவுட், சினே ராணா வலு சேர்க்கிறார்கள். காய்ச்சலால் முந்தைய ஆட்டத்தில் விளையாடாத ஆல்-ரவுண்டர் அமன்ஜோத் கவுர் இன்றைய ஆட்டத்திற்கு திரும்புவார் என தெரிகிறது. ‘ஹாட்ரிக்’ வெற்றிக்கு குறி வைத்து இந்தியா வியூகங்களை தீட்டி வருகிறது.
லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் 69 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலேயே எழுச்சி பெற்ற தென்ஆப்பிரிக்கா 232 ரன் இலக்கை 40.5 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது. தஸ்மின் பிரிட்சின் சதமும் (101 ரன்), மிலாபாவின் சுழல் ஜாலமும் (4 விக்கெட்) தென்ஆப்பிரிக்காவுக்கு வெற்றியை பெற்றுத்தந்தது. அதே உத்வேகத்துடன் இந்தியாவுக்கு கடும் போட்டி அளிக்க காத்திருக்கிறார்கள். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டு இருப்பதால் ரன்மழையை எதிர்பார்க்கலாம்.
ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகளும் 33 முறை மோதியிருக்கின்றன. இதில் 20-ல் இந்தியாவும், 12-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இந்தியா: பிரதிகா ராவல், ஸ்மிர்தி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா, சினே ராணா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரனி, கிரந்தி கவுட், ரேணுகா சிங் அல்லது அமன்ஜோத் கவுர்.
தென்ஆப்பிரிக்கா: லாரா வோல்வார்ட் (கேப்டன்), தஸ்மின் பிரிட்ஸ், சுனே லுஸ், மரிஜானே காப், அனேகே பாஷ், சினாலோ ஜாப்தா, குளோயி டிரையான், நடினே டி கிளெர்க், மசபதா கிளாஸ், அயபோங்கா காகா, நோங்குலுலேகா மிலாபா.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.