ஜோஹர் பாரு,
ஜோஹர் கோப்பைக்கான சர்வதேச ஜூனியர் ஆக்கி (21 வயதுக்குட்பட்டோர்) போட்டி மலேசியாவில் உள்ள ஜோஹர் பாரு நகரில் இன்று (சனிக்கிழமை) முதல் 18-ந் தேதி வரை நடக்கிறது.
இதில் 4 முறை சாம்பியனான இங்கிலாந்து, 3 முறை சாம்பியனான இந்தியா, ஆஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் ரோகித் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெறும் ஜூனியர் உலகக் கோப்பை போட்டிக்கு தயாராக இந்த போட்டியை சரியாக பயன்படுத்தி கொள்ள அணிகள் முயற்சிக்கும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.