கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்? – ஆதவ் அர்ஜுனா கேள்வி

புதுடெல்லி,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

போலீசார் கூறிய இடத்தில்தான் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் காவல் துறையினர்தான் எங்களை வரவேற்றனர். வேறு எங்கும் வரவேற்காத நிலையில், கரூரில் மட்டும் காவல்துறை எங்களை வரவேற்றது ஏன்?. விஜய் தாமதமாக வந்தார் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு. தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் அடித்து அனுப்பினர். தவெகவை முடக்க திமுக முயற்சித்தது.

காவல்துறை அனுமதி அளித்த நேரமான பிற்பகல் 3 மணி முதல் இரவு 10 மணிக்குள் விஜய் வந்தார். ஒட்டுமொத்த கட்சியையும் முடக்கும் செயலை திமுக செய்வதை நாங்கள் உணர்ந்தோம். தவெக மீது எப்படி பொய் குற்றச்சாட்டுகளை சொல்லலாம் என அரசு திட்டமிட்டது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சதி உள்ளது

கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்றதும் கரூர் மாவட்ட எல்லையில் காத்திருந்தோம். நீங்கள் உள்ளே வந்தால் கலவரம் ஆகிவிடும் என காவல்துறை கூறியதால் வெளியேறினோம். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரை கைது செய்து கட்சியை முடக்க திமுக முயற்சிக்கிறது. ஒருநபர் ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள் ஒவ்வொருவராக வந்து பேட்டி அளித்தனர்.

விஜய்யின் தலைமைப் பண்பு உள்ளிட்டவை குறித்து சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது அதிர்ச்சியளித்தது. விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த 1-ம் தேதி டெல்லிக்கு வந்தேன். நெரிசலில் இறந்த 41 பேரின் குடும்பத்தையும் தத்தெடுத்து அவர்களோடு இணைந்து பயணித்து உண்மையை கொண்டு வருவோம். 41 பேரின் குடும்பங்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்.

தவெக மற்றும் விஜய்யை குற்றவாளி ஆக்கும் வகையில் ஐகோர்ட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவு எந்த அளவுக்கு தவறு என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தெளிவாக்கியுள்ளது. எங்கள் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுள்ளது. எங்கள் கோரிக்கைகள் ஏற்கப்பட்டு சரியான உத்தரவு வந்துள்ளது. தவெக மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.