கர்னூல்: 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறினார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் ரூ.13,430 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார். கர்னூலில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ஆந்திராவில் கடந்த 16 மாதங்களில், முன்னேற்றத்திற்கான வாகனம் வேகமாக ஓடி வருகிறது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தால் நிறைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று டெல்லியும் அமராவதியும் சேர்ந்து வேகமான முன்னேற்றத்தை நோக்கிச் செல்கின்றன.
நாம் வேகமான முன்னேற்றத்தைக் காணும்போது, 2047-ஆம் ஆண்டில் சுதந்திரத்தின் 100 ஆண்டுகள் நிறைவடையும்போது, வளர்ந்த பாரதம் என்ற கனவு நிச்சயமாக நடக்கும். 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கும். 21-ஆம் நூற்றாண்டு 140 கோடி இந்தியர்களின் நூற்றாண்டாக இருக்கும்.
ஆந்திராவுக்கு சரியான தொலைநோக்குப் பார்வை மற்றும் தலைமை தேவைப்பட்டது. இன்று சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாணின் வடிவத்தில், ஆந்திராவுக்கு தொலைநோக்குப் பார்வை மற்றும் மத்திய அரசின் முழு ஆதரவு கிடைத்துள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக இன்று, பிரதமர் மோடி நந்தியால் மாவட்டத்தின் ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பூஜை செய்து தரிசனத்தில் பங்கேற்றார். பின்னர், ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ சிவாஜி ஸ்பூர்த்தி கேந்திராவிற்கு சென்றார்.