போலந்து நாட்டில் 15 வயது மகளை, பெற்றோர் 27 ஆண்டுகளாக ஒரு சிறிய அறைக்குள் பூட்டி வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. நடக்கக் கூட முடியாத நிலையில் 42 வயதில் அந்தப் பெண் மீட்கப்பட்டுள்ளார்.
போலந்தின் ஸ்விடோச்லோவிஸ் நகரில்தான் இந்தக் கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மிரேலா என்ற 42 வயது பெண், அவரது பெற்றோரால் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளாக ஒரு அறையில் பூட்டி வைக்கப்பட்டுள்ளார்.
1998 ஆம் ஆண்டு தனது 15 வயதில் கடைசியாக வெளியில் காணப்பட்ட மிரேலா, சமீபத்தில் ஒரு குடும்பத் தகராறு காரணமாக காவல்துறைக்கு வந்த அழைப்பின் பேரில் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மிரேலா இருந்த அறையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். அந்த அறை முழுவதும் ஒரு குழந்தையின் அறை போல காட்சியளித்திருக்கிறது.
ஒரு சிறிய படுக்கை, சிதறிக் கிடக்கும் பொம்மைகள் மற்றும் பூ வடிவிலான மேஜை மட்டுமே அங்கு இருந்துள்ளது. ஆனால், அந்த அறைக்குள் இருந்த மிரேலாவோ, 42 வயதில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் உடல் பலவீனம் காரணமாக நடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்திருக்கிறார்.
மிரேலாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், “இன்னும் சில நாட்கள் தாமதித்திருந்தால் மிரேலாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியாது. கடுமையான தொற்று காரணமாக அவர் மரணத்தின் விளிம்பில் இருந்தார்” என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து மிரேலாவின் பெற்றோரிடம் விசாரித்தபோது, அவர்கள் கூறிய பதில்கள் அதிகாரிகளை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின.
மிரேலாவின் தாய் கூறுகையில், “அவளை அவ்வப்போது தோட்டத்திற்குள் நண்பர்களைச் சந்திக்க அனுமதிப்போம். அறையில் உள்ள பொம்மைகளைத் தூக்கி எறிய நேரம் கிடைக்கவில்லை” என்று சாதாரணமாகக் கூறியிருக்கிறார்.
இந்த மீட்பு சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், மிரேலாவின் மருத்துவச் சிகிச்சைக்காக அக்கம்பக்கத்தினர் நிதி திரட்டத் தொடங்கிய பின்னரே இந்த விஷயம் வெளி உலகிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.