IPL 2026: இந்தியன் பிரீமியர் லீக் 2026ம் ஆண்டுக்கான சீசன் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருந்தாலும், அதன் மினி ஏலம் குறித்த எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போதே களைகட்ட தொடங்கியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த மினி ஏலம், அணிகள் தங்களது வியூகங்களை மாற்றி அமைக்கவும், புதிய வீரர்களை ஏலத்தில் எடுக்கவும் ஒரு முக்கிய வாய்ப்பாக அமைகிறது. கடந்த சீசனில் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படாத சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற அணிகள் இந்த மினி ஏலத்தில் பெரிய மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இந்த ஆண்டு ஏலம் இன்னும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
Add Zee News as a Preferred Source
IPL 2026 மினி ஏலம் எப்போது?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை ஐபிஎல் 2026 மினி ஏலத்திற்கான அதிகாரப்பூர்வ தேதியை அறிவிக்கவில்லை. இருப்பினும், பிரபல கிரிக்கெட் இணையதளமான Cricbuzz வெளியிட்ட தகவலின்படி, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் மத்தியில், குறிப்பாக டிசம்பர் 13 முதல் 15ம் தேதிக்குள் ஏலம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது. நவம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்பதால், டிசம்பர் மாதத்தில் ஏலம் நடைபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஏலம் நடைபெறும் இடம் எது?
ஏலம் நடைபெறும் இடம் குறித்தும் பிசிசிஐ எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் ஏலங்கள் வெளிநாடுகளில் நடத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, 2024ம் ஆண்டுக்கான ஏலம் துபாயிலும், 2025ம் ஆண்டுக்கான ஏலம் சவுதி அரேபியாவின் ஜித்தா நகரிலும் நடைபெற்றது. அதே போல், இந்த ஆண்டும் ஏலம் வெளிநாட்டில் நடக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், சில தகவல்களின்படி, இந்த முறை மினி ஏலத்தை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கொச்சி, மும்பை அல்லது டெல்லி ஆகிய நகரங்களில் ஏதேனும் ஒன்றில் ஏலம் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கேற்கும் 10 அணிகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings – CSK)
டெல்லி கேப்பிடல்ஸ் (Delhi Capitals – DC)
குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans – GT)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders – KKR)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants – LSG)
மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians – MI)
பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings – PBKS)
ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals – RR)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru – RCB)
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad – SRH)
About the Author
RK Spark