பிஹார் சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 6, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. பிஹாரில் ஜன் சுராஜ் வேட்பாளர்கள் 3 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இதற்கு பாஜகவின் அச்சுறுத்தலே காரணம் என ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார். பிரசாந்த் கிஷோர் கூறுவதுபோல், பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியல்? தலை தூக்கியுள்ளதா? என்பது குறித்து சற்று சுருக்கமாகப் பார்ப்போம்.
பிகே எனும் புதிய முகம்: இந்தியாவில் வடக்கிலிருந்து தெற்குவரை; மேற்கிலிருந்து கிழக்கு வரை பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுத்து அதிரடி முடிவுகள், அதிர்ச்சிகர திருப்பங்கள், ஆட்சி மாற்றங்கள் என சாத்தியப்படுத்திய பிரசாந்த் கிஷோர் பிஹார் தேர்தலில் தனியொரு அணியாக களமிறங்கியுள்ளார்.
இத்தேர்தலில் அவர் ‘கிங் மேக்கராக’ இருப்பாரா, இல்லை தேர்தலில் வாக்குகளைப் பிரித்து ஒரு தொங்கு சட்டப்பேரவைக்கு வழிவகுக்கும் ‘ஸ்பாயிலராக’ இருப்பாரா என்ற வாதவிவாதங்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில், அவர் பாஜக தனது கட்சி வேட்பாளர்களை அச்சுறுத்தி வருவதாக ஒரு பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பிஹாரின் 243 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ‘பரிசுத்தமான பார்ட்டி’, ‘நல்லாட்சி நல்கப்போகும் கட்சி’, ‘பிஹார் அரசியலில் மக்கள் எதிர்பார்க்கும் முதல் மாற்று அரசியல் கட்சி’ என்றெல்லாம் தன்னை பிராண்டிங் செய்து வருகிறார் பிகே. அவரது பாதயாத்திரைகள் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஆனால், இவை மட்டுமே போதாது பிஹார் அரசியலில் பிழைத்துக் கொள்ள.!
சாதியும்; பிஹாரும்! பிஹார் என்றாலே சாதி அரசியல் தான் என்பது தேசம் அறிந்தது. சாதி அடிப்படையில்தான் அங்கு வேட்பாளர் தேர்வு இருக்கும். யாதவர்கள், ரஜபுத்திரர்கள், பூமிஹர்கள் என்றும், இன்னும் பிற இதர பிற்படுத்தப்பட வகுப்பினரும்தான் அங்கே அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர். இத்தகைய சூழலில் சாதி அரசியலால் சோர்வடைந்த இளம் தலைமுறையினருக்கான மாற்று முகம் ஜன் சுராஜ் என்று முழங்குகிறார் பிகே.
இருப்பினும், ஆர்ஜேடி, ஜேடியு, பாஜக, எல்ஜேபி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரியக் கட்சிகளுக்கு மத்தியில் புதிதாக முளைத்து பூத் நெட்வொர்க் பலமில்லாத, பிஹார் அரசியலுக்குத் தேவையான சாதிய முகங்கள் இல்லாத, தேர்தல் கள அனுபவம் இல்லாத வேட்பாளர்களைக் கொண்டு பிகே வாக்குச் சிதறலை மட்டுமே செய்வார். அது எதிர்க்கட்சி வாக்குகளாகவும் இருக்கலாம், இல்லை ஆளுங்கட்சியின் வாக்குகளாகவும் இருக்கலாம். அவரது வாக்குப் பிரிப்பு பலமானது ஒருவேளை தொங்கு சட்டசபைக்குக் கூட வழிவகுக்கலாம் என்று கணிக்கின்றனர் அரசியல் நிபுணர்கள்.
பாஜகவே காரணம்; பிகேவின் குற்றச்சாட்டு… இந்நிலையில், ஜன் சுராஜ் கட்சியின் 3 வேட்பாளர்கள் முதுர் ஷா, சத்ய பிரகாஷ் திவாரி, சசி சேகர் சின்ஹா ஆகியோர் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றுள்ளனர். இதுகுறித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:
“தேர்தலில் யார் வென்றாலும் கவலையில்லை. நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்ற பிம்பத்தை பாஜக கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கியுள்ளது. ஆனால், புதிய கட்சியான ஜன் சுராஜ் கட்சியை கண்டு தே.ஜ. கூட்டணி பயப்படுகிறது. ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற வற்புறுத்தப்பட்டுள்ளனர்.
இதுதான் பாஜகவின் தன்மை. பிரஹம்பூரில் எல்ஜேபி கட்சி ஹுலாஸ் பாண்டே என்ற வலுவான வேட்பாளரை களமிறங்கியுள்ளது. எங்களின் வேட்பாளார் சத்ய பிரகாஷ் திவாரி 3 நாட்கள் அங்கு பிரச்சாரம் செய்தார். ஆனால், நேற்று மனுவை வாபஸ் பெற்றுள்ளார். ஜன் சுராஜ் வேட்பாளர்கள் ஓடவில்லை அவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது.
கோபால்கஞ்ச் வேட்பாளர் சசி சேகர் சின்ஹா கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் துல்லிய நேரத்தில் கலந்து கொள்வார். நேற்றைய முன்தினம் அவர் பிரச்சாரம் செய்துவந்தார். இரவு 11 மணிக்குப் பின்னர் அவரை பாஜக எம்எல்சி மற்றும் இன்னும் பிற முக்கியத் தலைவர்கள் சந்தித்து மனுவை வாபஸ் பெறும்படி மிரட்டியுள்ளனர். அதற்கான புகைப்பட ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
எங்கள் கட்சியின் தனாபூர் வேட்பாளர் முதுர் ஷாவுக்கு அழுத்தம் கொடுத்து மனுவை வாபஸ் பெற வைத்துள்ளனர். இந்த அச்சுறுத்தல் காரணமாக பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது என தனாபூர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
முதுர் ஷாவை ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் கடத்தியதாக பாஜக தலைவர்கள் கூறினர். ஆனால், அவர் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் உள்ள போட்டோ வெளிவந்துள்ளது.
பாஜக எப்படி வேண்டுமானாலும் மிரட்டட்டும். ஆனால், எங்களின் 240 வீரர்கள் களத்தில் உள்ளனர். அவர்கள் ஓட மாட்டார்கள். என்டிஏவை அப்புறப்படுத்தும் வரை ஓயவும் மாட்டார்கள். நவ.14-ல் எல்லாம் தெளிவாகப் புலப்படும்.
என்டிஏ-வுக்கு மகாகட்பந்தன் கூட்டணியைப் பார்த்து பயமில்லை. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் பாகுபலிகள், மணல் கொள்ளைக்காரர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். என்டிஏவுக்கு ஜன் சுராஜில் இருக்கும் மருத்துவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற நல்லவர்களைப் பார்த்துதான் பயம்.
சல்மான் கானின் ‘தபாங்’ படத்தில் வரும் ஒரு வசனம் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. “இவர்களுக்கு குண்டர்களைக் கண்டு பயமில்லை; நல்லவர்களைக் கண்டே பயம். எங்களின் வேட்பாளர்கள், அவர்கள் குடும்பத்தினர் மிரட்டப்படுகின்றனர். இங்கே வேட்பாளர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், மக்களுக்கு?” என்று வினவினார்.
பின்னர் ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “நாட்டின் உள்துறை அமைச்சரும், கல்வி அமைச்சரும் ஒரு மாநிலத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை மிரட்டி வேட்புமனுவை வாபஸ் பெற வைப்பதைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?. பிஹாரில் அது நடக்கிறது/ நாங்கள் தேர்தல் ஆணையத்தில் இதைப் பற்றி புகார் கொடுக்கப் போகிறோம். ஆனால் தேர்தல் ஆணையம் என்ன செய்யும்?. அது, அரசு என்னச் சொல்கிறதோ அதைத்தான் செய்யும்.!
குஜராத் மாநிலம் சூரத்தில் எதிர்க்கட்சி வேட்பாளர்களை வாபஸ் பெறவைத்து போட்டியின்றி வெற்றிபெற்றது போல் ‘சூரத் மாடல்’ வெற்றியைப் பெற பிஹாரிலும் பாஜக முயற்சிக்கிறது.
பாஜகவின் அட்டூழியங்களுக்கு கடந்த மக்களவைத் தேர்தலிலேயே மக்கள் தண்டனை வழங்கிவிட்டனர். பாஜக 400 இடங்களில் வெற்றி என்று கர்ஜித்து; வெறும் 240-ல் தான் வெற்றி பெற்றது என்பதை மறந்துவிடக் கூடாது” என்றார்.
பாஜக எதிர்வினை: இதற்கு எதிர்வினையாற்றிய பாஜக எம்பி. ராஜிவ் பிரதாப் ரூடி, “பிரசாந்த் கிஷோர் பிஹார் தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார். பிஹாரை புரிந்துகொள்ள பிஹார் தேர்தலில் நேரடியாக களம் கண்டால்தான் முடியும்” என்று கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் வேளையில் பிகேவின் இந்தக் குற்றச்சாட்டு அம்மாநில அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளதோடு, பிஹார் தேர்தல் களத்தில் ‘மிரட்டல்’ அரசியல் தலைதூக்கியுள்ளதா என்ற ஐயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.