தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே சிறிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் காட்டாற்று வெள்ளம் ஆற்றுப்பாலத்தில் ஆர்ப்பரித்து ஓடுகிறது. கனமழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல மூன்று நாட்களுக்குத் தற்காலிகமாகத் தடை விதித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

இதன்படி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக அதிகளவிலான மழை பெய்து வருகிறது. இதனால் மலைப்பாதைகள் வழியாக ஆங்காங்கே தண்ணீர் வழிந்தோடுகிறது.
எனவே, வரும் நாட்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாலும், முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கையாக சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் பிரதான மலை சாலையில் சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகன போக்குவரத்திற்கும் சேலத்திலிருந்து குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் மற்றும் கனரக வாகன போக்குவரத்திற்கும் இன்று 22.10.2025 மாலை 7 மணி முதல் 24.10.2025 வரை தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது.
ஏற்காடு மலைப்பகுதிகளில் அதிகளவிலான மழைப்பொழிவு இருப்பதாலும், சாலைகளில் ஆங்காங்கே பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாலும் சுற்றுலாப்பயணிகள் 24.10.2025 வரை ஏற்காடு வருவதை முற்றிலும் தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதற்கு முழு ஒத்துழைப்பினை நல்கிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.