புதுடெல்லி: டெல்லி காவல்துறை மற்றும் பிஹார் காவல்துறை இணைந்து இன்று அதிகாலையில் நடத்திய என்கவுன்ட்டரில், பிஹாரில் தேடப்படும் குற்றவாளியான ரஞ்சன் பதக் கும்பலை சேர்ந்த நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
டெல்லியின் பகதூர் ஷா மார்க்கில் அதிகாலை 2.20 மணியளவில் டெல்லி-பிஹார் காவல்துறை நடத்திய என்கவுன்ட்டரில், மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த கும்பல் ரஞ்சன் பதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் ஆவர். இக்கும்பலின் முக்கிய குற்றவாளியான ரஞ்சன் பதக் (25) மற்றும் பிம்லேஷ் மஹ்தோ (25), மனிஷ் பதக் (33) மற்றும் அமன் தாக்கூர் (21) ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அமன் தாக்கூர் டெல்லியின் கர்வால் நகர் பகுதியை சேர்ந்தவர். மற்ற 3 பேரும் பிஹாரில் உள்ள சீதாமர்ஹியைச் சேர்ந்தவர்கள் ஆவர். வரவிருக்கும் பிஹார் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக இந்தக் கும்பல் ஒரு பெரிய குற்ற நடவடிக்கையைத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பேசிய டெல்லி குற்றப்பிரிவு டிசிபி சஞ்சீவ் யாதவ், “போலீஸார் அவர்களைப் பிடிக்க முயன்றபோது அந்த கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தினர். போலீஸாரின் பதிலடி தாக்குதலில் நான்கு குற்றவாளிகளும் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளாகினர். பின்னர் அவர்கள் ரோஹினி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.” என்று கூறினார்.
டெல்லி மற்றும் பிஹார் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர். அதே நேரத்தில் தடயவியல் மற்றும் குற்ற விசாரணைக் குழுக்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளன.
இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட அனைவரும் கொலைகள் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைகள் உட்பட பிஹாரில் பல வழக்குகளில் தேடப்பட்டவர்கள். கும்பலின் தலைவனான ரஞ்சன் பதக், பிஹார் மற்றும் அருகிலுள்ள மாநிலங்களின் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். அவர் கடந்த காலங்களில் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் டெல்லி காவல்துறைக்கு வெளிப்படையாக சவால் விடுத்திருந்தார்.