ஈரோடு மாவட்டம், பாண்டிக் கொடுமுடி: தீய சக்திகள் விலகும், மன நோய் தீர்க்கும் மகுடேஸ்வரர்!

கொடுமுடி மகுடேஸ்வரர்

கொங்கு நாட்டில் புகழ்பெற்ற ஏழு சிவத்தலங்கள். உண்டு. அவற்றை

ஆதி கருவூர் அதி வெஞ்சமாக்கூடல்

நீதிமிகு கறைசை நீள் நணா – மேதினியில்

நாதன் அவிநாசி நன்முருகன் பூண்டித் திருச்

சோதிச் செங்கோடெனவே சொல் – என்று

என்று பட்டியல் இடுகிறது பழம் பாடல் ஒன்று. காவிரி நதியின் கரையில் அமைந்த இந்தத் தலத்தில் காவிரி, கிழக்கு நோக்கிப் பாய்கிறாள்.

ஈரோட்டில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தலத்தில் சுவாமி மகுடேஸ்வரர் என்கிற திருநாமத்தோடும் அம்பாள் ஸ்ரீவடிவுடைநாயகி என்கிற திருநாமத்தோடும் அருள்கிறார்கள். இங்கே பெருமாளுக்கும் ஓர் ஆலயம் அமைந்துள்ளது.

சுவாமி, அம்பாள், பெருமாள் ஆகிய மூவருக்கும் தனித்தனி கோபுரங்கள் அமைந்துள்ளது இவ்வாலயத்தின் சிறப்பு. ஸ்ரீ மகுடேஸ்வரர் கோயிலின் ஐந்து நிலை ராஜகோபுரத்தை கடந்து உள்ளே நுழைந்தால், முன்மண்டபத்தின் வடகிழக்குப் பகுதியில் நவகிரகம், பைரவர் மற்றும் சனீஸ்வரர் சந்நிதிகள் அமைந்துள்ளன. கிழக்குச் சுற்றில் இருந்து தெற்குச் சுற்றுக்குள் திரும்பினால் கணபதி, நால்வர், அறுபத்து மூவர், சேக்கிழார், அருணகிரிநாதர். மேற்குச் சுற்றில் – தென்மேற்கு மூலையில், சுயம்பு விநாயகர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

அகத்தியர்
அகத்தியர்

ஸ்ரீ காவிரி கண்ட விநாயகர்

சுயம்பு விநாயகருக்கு, ‘ஸ்ரீ காவிரி கண்ட விநாயகர்’ என்கிற திருநாமமும் உண்டு. காவிரியின் அகந்தையை அடக்க அகத்தியர் அதைத் தன் கமண்டலத்துக்குள் அடக்கினார் என்றும் அதை விநாயகப்பெருமான் காகமாக வந்து தட்டிவிட்டு காவிரியைப் பாயச் செய்தார் என்றும் புராணம் உண்டு. அப்படி விநாயகப்பெருமான் கமண்டலத்தைத் தட்டி விட்ட இடம் கொடுமுடி.

ஸ்ரீகாவிரி கண்ட விநாயகரை வணங்கி நகர்ந்தால், உமாமகேஸ்வரர் சந்நிதி. தொடர்ந்து, அகத்தீஸ்வரர்; அகத்தியர் வழிபட்ட லிங்கம் மற்றும் ஸ்ரீகஜலட்சுமி தாயாரை தரிசிக்கலாம். வடமேற்கு மூலையில், தேவியருடன் ஸ்ரீசுப்ரமணியர். இத்தல முருகன் குறித்து அருணகிரிப் பெருமான் அற்புதமான திருப்புகழ் ஒன்றைப் பாடியிருக்கிறார். வடக்குச் சுற்றில் நடராஜரையும் சிவகாமி அம்மையையும் தரிசிக்கலாம்.

மகா மண்டபமும் அர்த்த மண்டபமும் கடந்து சென்றால் ஸ்ரீமகுடேஸ்வரரை தரிசிக்கலாம்.

இந்த ஈசன், மேருவின் மகுடத்தில் தோன்றியவர் என்பதால் மகுடேஸ்வரர் என்று திருநாமம் உண்டானது. அழகு தமிழில் இவரை கொடுமுடிநாதர் என்று அழைக்கிறர்கள். மலைக்கொழுந்தீசர், மகுடலிங்கர், கொடுமுடி லிங்கர், திருப்பாண்டிக் கொடுமுடி மகா தேவர், கொடுமுடி உடையார் எனவும் திருநாமங்கள் இந்த ஈசனுக்கு உண்டு. குட்டையான சிவலிங்கத்தின் ஆவுடையார், சதுர வடிவானது; பாணத்தின் மீது, விரல் தடங்கள் உள்ளன. இவை அகத்தியர் பூஜை செய்த காலத்தில் ஏற்பட்டது என்கிறார்கள்.

இந்த இறைவனின் மீதுதான், நமச்சிவாயத் திருப்பதிகம் பாடினார் சுந்தரர். இந்தத் தலத்துச் சிவனாரை பாடும்போதே, ‘நாதாந்த நட்டன்’ (நடனமாடுபவன்) என்று பாடினார் அப்பர்.

கொடுமுடிநாதர்
கொடுமுடிநாதர்

வடிவுடை நாயகி -அம்பாள் சந்நிதி

சுவாமி சந்நிதிக்கு வலப்புறம் அம்பாள் சந்நிதி. இதுபோன்ற தலங்களை கல்யாண தலங்கள் என்பர். ஸ்ரீவடிவுடைநாயகி… அபய- வர ஹஸ்தங்களும் மலர்களும் திகழும் நான்கு திருக்கரங்கள்; கால்களைச் சேர்த்து வைத்துக் கொண்டு அற்புத கோலத்தில் அருள்பாலிக்கிறாள் அம்பிகை.

இவளுக்கு, சௌந்தர நாயகி, பண்மொழி அம்மை, மதுரபாஷிணி, திரிபுரசுந்தரி என்றும் திருநாமங்கள் உண்டு. அனைத்திலும் சிறப்பு- அம்பாள், சதுரபீட ஆவுடையாரைத் தமது பீடமாகக் கொண்டு அருள்கோலத்தில் நிற்கிறாள். அம்பாள் கோஷ்டத்தில் தனிச் சிலையாக சண்டேஸ்வரி அருள்பாலிக்கிறாள்.

வடிவுடை நாயகியை வழிபட்டால், பேச்சு செம்மையாக வரும். நெடுநாள் பேசாத குழந்தைகள் பேசுவர், வாக்கு வன்மையும் கவித்துவமும் கிட்டும். இசையில் பெரும் திறமை அடைவர்.

சாபம், பாவம் நீக்கும்

பிரம்மாவின் அடையாளம் வன்னி மரம். இத்தல விருட்சமும் அதுவே. இதன் அடியில்… அமர்ந்த கோலத்தில் பிரம்மன். பிரம்மாவின் நான்கு முகங்களை, நான்கு வேதங்களாகக் காணும் போது, அதர்வண வேதத்துக்கான மரம் – வன்னி. எனவே, இங்கே மும்முகனாகக் காணப்படுகிறார் பிரம்மன். இந்த வன்னி மரத்தில், முள்ளோ, பூவோ, காயோ கிடையாது. இங்கே இறைவனை வழிபட்டு அருள் பெறுகிறார் பிரம்மன். எனவே சாபமோ பாவமோ, இந்தத் தலத்தில் போய் விடும்.

கொடுமுடி தலபுராணம்

வடக்கில் திருமங்கை நாச்சியார் சந்நிதி. அடுத்து பள்ளி கொண்ட கோலத்தில், ஸ்ரீவீரநாராயணப் பெருமாள் சந்நிதி. இவர் கிருத யுகத்தில் ஆதிநாராயணர் என்றும், திரேதா யுகத்தில்- அனந்த நாராயணர்; துவாபர யுகத்தில்- வேத நாராயணர் என்றும் அழைக்கப்பட்டாராம். பெருமாளின் அருகில் கருடாழ்வார், தலைமாட்டில் ஸ்ரீதேவி, கால் மாட்டில் பூதேவி. நாபிக் கமலத்தில் பிரம்மன்; அவருக்கு வலப்புறம் நாரதர்; இடப்புறம்- வாசுதேவர். பெருமாளின் கால்மாட்டில் விபீஷணர்; அனுமன்; கவேர முனிவர் ஆகியோர் தரிசனம் கொடுக்கின்றனர்.

கொடுமுடி கோயில்
கொடுமுடி கோயில்

காவிரி மற்றும் தேவ தீர்த்தத்தில் மூழ்கி, வன்னியையும் சுவாமியையும், திருமாலையும் வழிபட, பிணிகளும், தீய சக்திகளும் விலகும். மனநோயும் தீரும் என்கிறார்கள்.

மலையத்துவச பாண்டியனின் மகனுக்குப் பிறவியிலேயே விரல்கள் சரியாக வளராமல் இருந்தன. கொடுமுடிநாதரிடம் வேண்டிய பின், குறை தீர்ந்தது. எனவே, இத்தலத்தை அங்கவர்த்தனபுரம் என்கிறது தலபுராணம்.

இத்தகைய சிறப்புகளை உடைய அற்புதமான தலத்துக்கு வாய்ப்பிருக்கும் அன்பர்கள் ஒருமுறை சென்று தரிசனம் செய்துவாருங்கள். வாழ்க்கையில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.