மும்பை,
13-வது பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அதன்படி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா , இந்தியா ஆகிய 4 அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன.
இந்நிலையில், பெண்கள் உலகக்கோப்பை தொடரின் லீக் சுற்று இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதில், நவிமும்பையில் இன்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் இந்தியா , வங்காளதேசம் அணிகள் மோதின. மும்பையில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மழை நின்றுவிட்டதால் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி வங்காளதேச அணி முதலில் பேட்டிங் செய்ய இருந்தது. மீண்டும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடங்கிய ஆட்டம் 27 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி பேட்டிங் செய்த வங்காளதேச அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஷர்மின் அக்தர் , சோபனா மோஸ்டரி நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். மற்ற வீராங்கனைகள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் வங்காளதேச அணி 27 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்மின் அக்தர் 36 ரன்களும் , சோபனா மோஸ்டரி 26 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய ராதா யாதவ் 3 விக்கெட்டுகளும், ஸ்ரீசராணி 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 120 ரன்கள் இலக்குடன் இந்திய அணியின் சார்பில் ஸ்மிருதி மந்தனா மற்றும் அம்ஜோத் கவுர் ஆகியோர் களமிறங்கினர். சிறப்பாக ஆடி இந்த ஜோடி ரன்களை குவித்து வந்தநிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது இந்திய அணி 8.4 ஓவர்களில் 57 ரன்கள் குவித்திருந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா 34 ரன்களும், அம்ஜோத் கவுர் 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். மழை நிற்காமல் பெய்து வந்தநிலையில் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.