`வீர தீர சூரன்’ திரைப்படத்தின் ரிலீசுக்குப் பிறகு விக்ரம் நடிக்கும் படங்கள் எதுவும் டேக் ஆஃப் ஆகவில்லை.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக கடந்தாண்டே அறிவிப்பு வந்திருந்தது.
அது விக்ரமின் 63-வது படமாக உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், எழுத்து வேலைகளில் மடோன் அஸ்வின் தீவிரமாக செயல்பட்டு வருவதால் அத்திரைப்படம் கொஞ்சம் தாமதமாகி வருவதாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து `96′ பிரேம்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருக்கிறார் என்றும் அறிவிப்பு வந்திருந்தது.
ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு அந்தப் படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளிவரவில்லை.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பிரேம்குமார் ஃபகத் பாசிலை கதாநாயகனாக வைத்து இயக்குவதாகவும் அப்டேட் ஒன்றை தந்திருந்தார்.
மடோன் அஷ்வின் எழுத்து வேலைகளில் ஈடுபட்டு வருவதால், விக்ரமின் 63-வது படத்தை இயக்க அறிமுக இயக்குநர் வந்திருக்கிறார்.
போடி கே ராஜ்குமார் என்கிற புதுமுக இயக்குநர் ஒருவர்தான் விக்ரமின் 63-வது படத்தை இயக்குகிறார்.
இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சாந்தி டாக்கீஸ் நிறுவனம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து சாந்தி டாக்கீஸ் நிறுவனம், “ஒரு உற்சாகமான பயணத்தின் தொடக்கம்! #சியான்63 படத்திற்கு இயக்குநராக போடி ராஜ்குமாரை அறிவிப்பதில் மகிழ்ச்சி! விக்ரம் சாரைப் போன்ற ஒரு சக்திவாய்ந்த நடிகரை ஒரு அறிமுக இயக்குநர் இயக்குவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இப்படத்திற்குப் பிறகு மடோன் அஷ்வின் இயக்கும் படத்திற்கு விக்ரம் செல்வார் என்றும் கூறப்படுகிறது.
`சாமுராய்’ படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குநருடன் கைகோர்த்திருக்கிறார் விக்ரம்.
அப்படத்தின் மூலம்தான் இயக்குநர் பாலாஜி சக்திவேல் திரைத்துறைக்குள் என்ட்ரி கொடுத்தார்.
கிட்டத்தட்ட 23 வருடங்களுக்குப் பிறகு அறிமுக இயக்குநர் இயக்கத்தில் நடிக்கிறார் விக்ரம்.