ராமநாதபுரம்: முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மலர் தூவிமரியாதை செலுத்தினார். பின்னர்,தேவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட்ட அவர், தேவரின் பூஜை அறையில் 5 நிமிடம் தியானம் செய்தார். நினைவிடப் பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜனிடம் நலம் விசாரித்தார். அதிமுக எம்.பி.தர்மர், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் முரளிதரன் உடன் இருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு சமுதாயத்துக்கு சொந்தக்காரர் என்று கருதுவது நமது அறியாமை. அவர் ஒரு சித்தர். சத்தியம், வாய்மை தவிர வேறு எதையும் கடைபிடிக்காதவர். தன்னைத் தேடி வந்த பதவிகளை ஒதுக்கியவர். அவரைப் போற்றுவது தேசியத்தையும், தெய்வீகத்தையும் போற்றுவதாகும். இந்த பூமி இருக்கும் வரை அவரது புகழ் நிலைத்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், ராஜ கண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், டிஆர்பி.ராஜா, எம்.பி. கனிமொழி உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், ஆர்.பி.உதயகுமார், எம்.மணிகண்டன், காமராஜ், விஜயபாஸ்கர், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், அதிமுகமுன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் ஒரே நேரத்தில் வந்து மரியாதை செலுத்தினர். அப்போது, இருவரும் ஆரத்தழுவி கட்டியணைத்துக் கொண்டனர். மதுரை ஆதீனம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர், வி.கே.சசிகலா, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, மாநிலப் பொருளாளர் திலக
பாமா, தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜயபிரபாகரன், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், மூவேந்தர் முன்னேற்றக் கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், மூவேந்தர் முன்னணி கழகத்தலைவர் சேதுராமன் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். பல்வேறு அமைப்பினர், ஏராளமான பொதுமக்களும் நீண்ட வரிசையில் வந்து தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
‘பாரத ரத்னா’ வழங்க கோரிக்கை: பசும்பொன்னில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ‘‘பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். அதற்கு நாங்களும் வழிமொழிவோம்’’ என்று கூறினார். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறும்போது, ‘‘அனைத்து மதம், சாதியினருக்கும் பொதுவானவர் தேவர். தேசபக்தி மிக்கவர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கடிதம் கொடுத்துள்ளோம்’’ என்றார்.
தேவர் ஜெயந்தியையொட்டி தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர். அதன் விவரம்:
பிரதமர் மோடி: இந்தியாவின் சமூக, அரசியல் வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமையான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு, அவரது குருபூஜை நாளில் அஞ்சலி செலுத்துகிறேன். நீதி,சமத்துவத்துக்கும், ஏழைகள், விவசாயிகளின் நலனுக்கும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு அடுத்தடுத்த தலைமுறைக்கும் ஊக்கம் அளிக்கும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: மக்களுக்கு ஊக்கம் அளிக்கும் தலைவராகத் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்க தேவர், ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். நீதி, ஒற்றுமைக்காக போராடினார். தைரியம், இரக்கம் மற்றும் நீதிக்கு அவரது வாழ்வுதான் ஜொலிக்கும் உதாரணம். சமத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை நோக்கிய நமது பயணத்தில், தேவரின் கொள்கைகள் வழிகாட்டியாக உள்ளன.இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துணை முதல்வர் உதயநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ், தவெக தலைவர் விஜய், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளிட்டோரும் தேவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர்.
