ஜெய்ப்பூர்: பேசுவதை பேச்சாக மொழி பெயர்க்கும் உலகில் முதல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை, ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த இளைஞர் ஸ்பார்ஸ் அகர்வால். வாராணசி பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஐஐடி மாணவர். இவர் பிக்ஸா என்ற ஏஐ ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். மனிதர்கள் பேசுவதை போல் குரலை நேரடியாக மொழிபெயர்ப்பு செய்யும் லூனா என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இவர் உருவாக்கியுள்ளார். இது பேச்சு வடிவிலேயே விரைவாகவும், உணர்வுபூர்வமாகவும் குரல் வடிவிலேயே மொழி பெயர்க்கிறது. இதில் உள்ள தொழில்நுட்ப கட்டமைப்பு பேசும் தொனியை மாற்றவும், பாடவும் அனுமதிக்கிறது. இது மனிதர்களிடம் பேசுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
இதை உருவாக்கிய ஸ்பார்ஸ் அகர்வால், சமீபத்தில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து பாராட்டைப் பெற்றார்.
இதுகுறித்து அகர்வால் கூறுகையில், ‘‘இந்தியாவின் ஏஐ எங்கே என்ற கேள்வியை அனைவரும் கேட்கின்றனர். அதற்கான பதில் இந்த லூனா ஏஐ மாடல்தான். பேச்சை நேரடியாக மொழி பெயர்க்கும் உலகின் முதல் ஏஐ தொழில்நுட்பம் இதுதான். உலகத் தரத்திலான தொழில்நுட்பம் இந்தியாவில் இருந்து வரும் என்பதற்கு இதுதான் சான்று’’ என்றார்.
லூனா ஏஐ தொழில்நுட்பம்: உருவாக்கத்தில் அகர்வாலுடன் இணைந்து நிதிஷ் கார்த்திக், அபூர்வ் சிங் மற்றும் பிரதியுஷ் குமார் ஆகியோரும்
பணியாற்றியுள்ளனர்.
