பெங்களூரு,
கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டுத்துறை மற்றும் அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில் கையெழுத்தானது.
இதில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
தற்போதைய சூழலில் ஏழ்மை நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது, கிராமப்புற மக்களை மேம்படுத்துவது மட்டுமல்லாது வறுமையையும் ஒழிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்து கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும். மகளிர் சுய உதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அமேசான் நிறுவனத்தின் டிஜிட்டல் வணிகம் வழியாக விற்பனை செய்ய இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த முயற்சியை வெற்றி பெற வைக்க வேண்டும்.
மகளிர் சுயஉதவி குழுக்கள் நல்ல தரமான பொருட்களை உற்பத்தி செய்து அதன் மூலம் சந்தை வாய்ப்புகளை பெருக்கி கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் நேர்மையாக பணியாற்றும் மக்கள் உள்ளனர். அவர்கள் இதன் மூலம் தான் உற்பத்தி செய்யும் பொருளை தேசிய அளவில் விற்பனை செய்ய முடியும் என்றார்.
இதில் பேசிய திறன் மேம்பாட்டுத்துறை மந்திரி நாராயணகவுடா பேசுகையில், “அமேசான் நிறுவனத்துடன் செய்து கொண்டுள்ள இந்த ஒப்பந்ததத்தால் கிராமப்புற பெண்கள் பொருளாதார ரீதியாக பலம் பெறுவார்கள்” என்றார்.