சூடுபிடிக்கும் பஞ்சாப் தேர்தல் களம்; காங். முதல்வர் வேட்பாளர் நாளை அறிவிப்பு: லூதியானாவில் ராகுல் பிரசாரம்

லூதியானா: பஞ்சாப் காங்கிரசின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை, லூதியானாவில் நாளை நடைபெறும் கூட்டத்தில் ராகுல்காந்தி அறிவிக்கவுள்ளார். பஞ்சாப் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளராக பகவந்த் மானை அறிவிப்பதற்கு முன்பு, அக்கட்சி மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதேபோல, அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்? என்று மக்களிடம் காங்கிரஸ் கருத்துக்கணிப்பு எடுத்துவருகிறது. தற்போது முதல்வராக உள்ள சரண்ஜித் சிங் சன்னியே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டுவருகிறது. ஆனால் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தன்னை முதல்வர் வேட்பாளராக கட்சி தலைமை அறிவிக்கும் என்ற நம்பிக்கையில் பேசி வருகிறார். அதனால், பஞ்சாப் காங்கிரசில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடும் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை நாளை (பிப். 6) அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லூதியானாவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை நாளை லூதியானாவில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி அறிவிப்பார். காணொலி காட்சி மூலம் நடக்கும் பேரணியில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார்’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.