தென்காசி மாவட்டத்தில் ஜம்புநதி கரையில் கடையம் கிராமம் உள்ளது. வரலாற்றுடன் தொடர்புடைய ஜம்புநதி மற்றும் ராமநதி பாயும் பகுதியில் இருக்கும் இந்தக் கிராமம் பழைமை வாய்ந்தது. இங்கு குப்பைகளை சேமிக்கவும், இயற்கை உரம் தயாரிக்கவும் மூன்று ராட்சதக் குழிகள் தோண்டப்பட்டன.
குழிகள் தோண்டியபோது மண்ணுக்குள் புதைந்து கிடந்த பானைகள் உடைபட்டுள்ளன. அங்கு பணியில் இருந்தவர்களுக்கு அவை முதுமக்கள் தாழி என்பது தெரியாததால் சிலவற்றை உடைத்துள்ளனர். இது குறித்த தகவல் பரவியதும் பொதுமக்கள் சென்று பார்த்த பின்னரே அவை முதுமக்கள் தாழி என்பது தெரியவந்துள்ளது.
பின்னர் குப்பைக் கிடங்குக்காகக் குழிதோண்டும் பணிகள் நிறுத்தப்பட்டு அங்கிருந்த முதுமக்கள் தாழிகளை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், இரவு நேரங்களில் ஒரு கும்பல் அந்தப் பகுதிக்குச் சென்று தங்கப் புதையல் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் குழிதோண்டி அங்கிருந்த முதுமக்கள் தாழிகளையும் எடுத்துச் சென்றதாக புகார் எழுந்துள்ளது.
பழங்காலத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் இடங்களில் அவர்கள் பயன்படுத்திய விலையுயர்ந்த பொருள்களையும் சேர்த்துப் புதைப்பது வழக்கம் என்பதால் அந்தப் பகுதியில் தங்கப்புதையல் இருக்கக் கூடும் என்ற பேச்சு எழுந்துள்ளது. அதனால் சிலர் இரவு நேரங்களில் தங்க வேட்டைக்குச் செல்வதாகப் புகார் எழுந்திருக்கிறது.
தங்கப் புதையல் தேடும் கும்பல் முதுமக்கள் தாழிகளை உடைத்துச் சேதப்படுத்தியதாக அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். அந்தப் பகுதியில் உள்ள பழைமையான கல்வெட்டில் புதையல் குறித்த தகவல் இருப்பதாக வதந்தி பரவுவதால் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் அதிகாரிகள் அந்த இடத்தைக் கைவசப்படுத்தி அகழாய்வைத் தொடங்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.
இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு, “குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணிக்காக குழிகள் தோண்டியபோது முதுமக்கள் தாழி கிடைத்துள்ளது. இது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கிருந்த முதுமக்கள் தாழிகளை பாதுகாப்பாக எடுத்துச் சென்று விட்டோம். அங்கு ஆட்கள் நுழையாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த இடம் பற்றி தொல்லியல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளோம்” என்றார்கள்.