நீட் விவகாரம்: சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

NEET Exemption for Tamil Nadu: 143 நாட்கள் நீட் மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திருப்பி அனுப்பியுள்ளார் ஆளுநர் என்று இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் நீட் விவகாரம் குறித்து தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று தொடர்ந்து தமிழக அரசு கோரிக்கை எழுப்பி வந்த நிலையில், தமிழக அரசு உயர்மட்ட கமிட்டி அமைத்து நீட் தேர்வால் மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 3ம் தேதி அன்று நீட் மசோதாவால் மாணவர்கள் பயன் அடைகிறார்கள் என்று கூறி மசோதாவில் மாற்றங்கள் தேவை என மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இது தொடர்பாக மாநிலங்களவை மற்றும் மக்களவையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழகம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்யும் நிலைமையும் உருவானது. இந்நிலையில் இன்று காலை நீட் தேர்வு தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கையை ஆளுநர் தவறு என குறிப்பிட்டது சரியல்ல என்று கூட்டத்தில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், நீட் விலக்கு தேவையற்றது என்ற ஆளுநரின் கருத்தை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் கூறினார். இன்று நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதிமுக கலந்து கொள்ளவில்லை. ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தீர்வு என்று கூறினார் முதல்வர். விரைவில் சிறப்பு சட்டமன்ற கூட்டம் கூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நீட் விலக்கு சட்டமுன்வடிவை மீண்டும் இயற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலை பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்க முடிவு அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என் ரவி அரசுக்கு திருப்பி அனுப்பியதை கண்டித்து ஆர்பாட்டத்தில் இறங்கினார்கள் அக்கட்சியினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.