`உடற்பயிற்சி செஞ்சா ஆண்மை குறைஞ்சுடும்; குழந்தை பொறக்காது’ என்கிற அச்சம் இன்றைக்கும் சிலரிடம் இருக்கிறது. அது எந்த அளவுக்கு உண்மை? சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.
“இந்த அச்சம் ஜிம்முக்கு செல்லும் பலரிடமும் இருக்கிறது. என்னிடமும் நிறைய பேர் இதுபற்றிக் கேட்டிருக்கிறார்கள். `உடற்பயிற்சி செஞ்சா ஆண்மைக் குறைஞ்சுடுமா டாக்டர்’ என்பார்கள் ஆண்கள். பெண்கள், ‘தொடர்ந்து உடற்பயிற்சி செஞ்சா கருத்தரிக்க முடியாதுன்னு சொல்றாங்களே டாக்டர்’ என்பார்கள். உடற்பயிற்சியில் அதிக ஈடுபாடு கொண்ட பெண்கள்கூட கர்ப்பமாக இருக்கும்போது உடற்பயிற்சி செய்தால் கரு கலைந்துவிடும் என்று நம்புகிறார்கள். ஆனால், இவை எவற்றிலுமே உண்மை கிடையாது.
மனித உடல் என்பது இயங்குவதற்காகவே படைக்கப்பட்டது. 12 மணி நேரம்கூட உடலுழைப்பு செய்யலாம். வேட்டை, விவசாயம் என்று பல மணி நேரம் உழைத்தவர்கள்தாம் மனிதர்கள். கடந்த 100 வருடங்களாகத்தான் நம்மில் பலரும் வொயிட் காலர் ஜாப் செய்ய ஆரம்பித்துவிட்டோம். அதே நேரம், சுவைக்கு ஆசைப்பட்டு வறுத்தது, பொரித்தது, இனிப்பு வகைகள் என்று கலோரி அதிகமான உணவுகளையும் அதிகம் சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். இதன் விளைவுதான் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற வாழ்வியல் பிரச்னைகள். இந்தப் பிரச்னைகள் வரக்கூடாது என்றால், ஒவ்வொருவரும் தினமும் 6,000 அடிகள் நடக்க வேண்டும். இது கிட்டத்தட்ட நாலரை கிலோ மீட்டர் வரும். `என் செக்ஸ் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும்’ என்று விரும்புபவர்கள் நாளொன்றுக்கு 10,000 அடிகள் நடக்கலாம். அல்லது 6 முதல் 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடக்கலாம்.
Also Read: ஆபாச படங்கள் பார்ப்பது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை – S2 E2
ஆண்கள் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம். தவிர, உடற்பயிற்சி செய்யும்போது டெஸ்டோஸ்டீரான் சுரப்பு தூண்டப்பட்டு ஆண்மையும் அதிகரிக்கும். உடற்பயிற்சி செய்யாமல் இருப்பவர்கள், கலோரி அதிகமான உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்துக்கு அடியில் கொழுப்பு அதிகமாகச் சேரும். ரத்தத்திலிருக்கிற ஆண் ஹார்மோன் சருமத்துக்கடியில் இருக்கிற அந்தக் கொழுப்புடன் இணைந்து பெண் ஹார்மோனாக மாறி ரத்தத்துடன் கலக்கும். இதை அரோமைடிஸேஷன் (aromatization of androgens to estrogen) என்போம். இது ஆண்மைக்குறைவை ஏற்படுத்தும்.
பெண்களுக்கும் உடற்பயிற்சி ஆரோக்கியத்தைத் தரும். ஆரோக்கியம் அவர்களுக்கு நல்ல கருத்தரிப்புத் திறனைக் கொடுக்கும். கருத்தரித்த பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி உடற்பயிற்சிகளைத் தொடரலாம். சில பெண்களுக்கு மட்டும், கர்ப்பமாக இருக்கும்போதும் சில நேரங்களில் ரத்தப்போக்கு இருக்கும். அவர்கள் மட்டும், உடற்பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் போட்டிக்கு முந்தைய நாள் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளக் கூடாது. விந்தணுக்களை இழந்தால் அவர்களால் மறுநாள் சிறப்பாக பர்ஃபார்ம் செய்ய முடியாது என்று ஒலிம்பிக் கமிட்டி வரைக்கும் நம்பிக்கொண்டிருந்தார்கள். அதனால் மனைவியோடு வரக்கூடாது என்ற தடையும் விதித்திருந்தார்கள். சமீபத்தில் வெளியான `சார்பட்டா பரம்பரை’ படத்தில்கூட இப்படியொரு காட்சி வரும். ஆனால், அது உண்மையல்ல. முந்தைய நாள் வைத்துக்கொண்ட தாம்பத்திய உறவு மறுநாள் அவர்களுடைய திறனை அதிகரிக்கிறது என்பதைப் பல ஆய்வு முடிவுகள் உறுதிப்படுத்தி விட்டன. விளைவு, தற்போது ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வருகிற வீரர்களைக் குடும்பமாக ஹோட்டலில் தங்க அனுமதிக்கிறார்கள்.
தினமும் ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்தால் யாருக்குமே எந்தத் தீங்குமே வராதா என்றால், வரலாம். ஜெயிக்க வேண்டுமென்பதற்காக ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணி நேரம் ஜிம்மிலேயே இருப்பவர்களுக்கு வளர்சிதை மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் நிகழலாம். பெண்களுக்கு மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் வரலாம். இதனால், பிற்காலத்தில் கருத்தரிப்பதில் பிரச்னைகள் வரலாம்.
Also Read: `திருமணத்துக்கு முன் தம்பதியினர் பேச வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்!’ – காமத்துக்கு மரியாதை S2 E5
மற்றபடி, ஆரோக்கியத்துக்காக ஜிம்முக்குச் சென்று உடற்பயிற்சி செய்கிற ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு வராது. பெண்களுக்குக் கருத்தரிப்பதில் சிக்கலும் வராது.”
தொடர்ந்து மரியாதை செய்வோம்!