டெல்லி: 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில் சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீடிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தலையொட்டி சட்டசபை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் 70 சட்டசபை தொகுதிகளுக்கும் , கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பிப்.14ஆம் தேதியும், பஞ்சாப்பில் உள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்.20-ஆம் தேதியும், மணிப்பூரில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கு பி.27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கிடையில் கொரோனாவின் பரவல் காரணமாக தேர்தல் ஆணையம் பேரணிகள் மற்றும் பிரச்சாரத்திற்கு ஜனவரி 31 வரை தடை விதித்த நிலையில், பிப்ரவரி 11 வரை கட்டுப்பாடுகள் நீட்டித்தது. இந்த நிலையில், 5 மாநில தேர்தல் பரப்புரை தீவிரமாக நடக்கும் நிலையில், சாலை மற்றும் வாகன பேரணி நடத்த தடை நீட்டிக்கப்படுவதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரசியல் கட்சிகள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பரப்புரை செய்வதற்கான தடையும் நீடிக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி மைதானத்தில் 30% பார்வையாளர்களுடன் கூட்டங்களை நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் கூறப்படுகிறது.