அகமதாபாத்: மக்களவையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணாமுல் கட்சி எம்பி மஹுவா மொய்த்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் எம்பி கோரியுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா, கடந்த 3ம் தேதி மக்களவையில் பேசும்போது, குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் தெருக்களில் அசைவ உணவுகள் விற்க தடை விதிக்கப்பட்டிருப்பது குறித்தும், ஜெயின் சமூகம் குறித்தும் பேசினார். இவரது பேச்சு ெபரும் சர்ச்சை பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில், சகல் ஜெயின் சமாஜ் அமைப்பின் தலைவரும், முன்னாள் எம்பியுமான விஜய் தர்தா வெளியிட்ட அறிவிப்பில், ‘மக்களவையில் திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ஜெயின் சமூகம் குறித்து பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. அவர் அதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும். அவரது பேச்சு இழிவானதாகவும், மிகவும் ஆட்சேபனைக்குரியதாகவும் உள்ளது. அவர்கள் சமண சமய போதனைகள் மற்றும் நடைமுறைகளை புரிந்து கொள்ள வேண்டும். எங்களது உணர்வுகளை புண்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று கூறினார். இதேபோல் பலரும் திரிணாமுல் எம்பிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே, ஜெயின் சமூகத்தைப் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் மக்களவையில் மஹுவா மொய்த்ரா பேசியுள்ளார். தற்போது மீண்டும் அதே சமூகம் குறித்து மக்களவையில் அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.