செய்தி சேகரிக்க சென்ற போது கண்ணிவெடியில் சிக்கி பத்திரிகையாளர் பலி: ஒடிசாவில் நக்சல் கும்பல் அட்டூழியம்

புவனேஸ்வர்: ஒடிசாவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் ஒருவர் கண்ணிவெடியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். ஒடிசா மாநிலத்தில் இம்மாத இறுதியில் ஐந்து கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நக்சல் கும்பல் ஊடுருவிய மலைக் கிராமங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக செய்தி சேகரிக்க புவனேஸ்வரில் இருந்து வெளியாகும் முன்னணி ஒடியா நாளிதழின் நிருபர் ரோஹித் குமார் பிஸ்வால் என்பவர், கலாஹண்டி மாவட்டத்தின் கர்லகுண்டா பாலம் பகுதிக்கு சென்றார். அப்போது அங்குள்ள மரத்தின் அருகே சென்ற போது, அங்கு வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி குண்டு வெடித்ததில் சம்பவ இடத்திலேயே ரோஹித் குமார் பிஸ்வால் பலியானார். தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு ரோஹித் குமார் பிஸ்வாலின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து கலாஹண்டி போலீஸ் எஸ்பி டாக்டர் விவேக் கூறுகையில், ‘தேர்தலை புறக்கணிக்க வேண்டும் எனக்கூறி, ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுபோன்ற இடங்களை தீவிரமாக கண்காணித்து வந்தோம். பாதுகாப்புப் படையினரைக் குறிவைத்து கண்ணிவெடிகள் வைத்திருப்பதற்கான வாய்ப்புகள் இருந்ததால், மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டோம். ஆனால், குறிப்பிட்ட பகுதியில் மெட்டல் டிடெக்டர்கள் மூலம் கண்ணிவெடி சோதனை நடத்துவதற்கு முன்னதாக, 46 வயதான பத்திரிகையாளர் ரோஹித் குமார் பிஸ்வால் கண்ணிவெடியில் சிக்கி இறந்துள்ளார். மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்றார். கண்ணிவெடி குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட பத்திரிகையாளருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.13 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.