'பாஜகவிற்கு பல்லக்கு தூக்குவதே அதிமுகவின் தலையாய பணி': அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

சென்னை: சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்கு தூக்குவதே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தலையாய பணி என தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“எங்கள் முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் துவங்கவிருக்கும் அனைத்து இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் சேருவதற்கு விடுத்த அழைப்பை ஏற்க மறுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவிற்கும் சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம், எங்களை ஏன் அழைக்கிறீர்கள்” என்று சொல்ல 7 பக்க அறிக்கை அளித்திருப்பது வேடிக்கை கலந்த விநோதமாக இருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து தர்மயுத்தம் என்ற நாடகத்தை நடத்தி, பின்னர் பாஜகவின் தயவில் பழனிசாமியுடன் இணைந்து துணை முதல்வர் பதவி அனுபவித்த அவர், சமூகநீதி பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார் என்பது தெரிந்ததுதான் என்றாலும் அரசியல் நாகரிகம் கருதியும் சமூகநீதியில் தமிழகத்தில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காகவே அதிமுகவையும் அழைத்தார் எங்கள் முதல்வர்.

இட ஒதுக்கீட்டை முதலில் 25 விழுக்காட்டிலிருந்து 31 விழுக்காடாக உயர்த்தியதே எங்கள் தலைவர் கருணாநிதி தான். பிற்படுத்தப்பட்டோருக்கு 9 ஆயிரம் ரூபாய் வருமான உச்சவரம்பு நிர்ணயித்த எம்ஜிஆரை கடுமையாக திமுக எதிர்த்த காரணத்தால் மட்டுமே அந்த உத்தரவை திரும்பப் பெற்றது யார் என்பது “ஜானகி அணியில்” இடம்பெற்றிருந்த ஓபிஎஸ்ஸுக்கே தெரியவில்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்த அதிமுக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அதனைச் செயல்படுத்த சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அப்போது இருந்த பிரதமர் சமூகநீதிக் காவலர் விபி சிங்குக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தி பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசுப் பணிகளில் பெற்றுக் கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி. விளிம்பு நிலை மக்களை கைதூக்கி விட பட்டியலின மக்களின் இட ஒதுக்கீட்டை 16 விழுக்காட்டிலிருந்து 18 ஆக உயர்த்தி, பழங்குடியினருக்கு 1 விழுக்காடு தனியாக கொடுத்து இன்றைக்கு உள்ள 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை இந்தியாவிற்கே முன்னோடியாகத் தமிழ்நாட்டில் கொண்டு வந்தது திமுக ஆட்சி.

அந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு மண்டல் தீர்ப்பால் ஆபத்து வருகிறது என்று தெரிந்தவுடன் அதற்கான அழுத்தத்தைக் கொடுத்து சட்டப் பாதுகாப்பு கொண்டுவர வைத்தது கருணாநிதியும், திமுகவும், திராவிடர் கழகமும் தான் என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ள பன்னீர்செல்வம் பழைய வரலாறுகளை சற்று புரட்டிப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

கச்சத்தீவை திமுக தாரைவார்க்கவும் இல்லை; விட்டுக் கொடுக்கவும் இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை. கச்சத்தீவு கொடுக்கப்பட்டதை எதிர்த்தவர் அப்போது முதல்வராக கருணாநிதி. 29.6.1974 அன்று பிரதமருக்கே கடிதம் எழுதி கடுமையாக எதிர்த்தவர் அவர். கழக எம்பிக்களை நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிடச் செய்தவர் அவர் என்பதும் ஏன், திமுக பொதுக்குழுவை கூட்டி எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் போட்டு தமிழ்நாடு முழுவதும் கண்டனப் போராட்டங்களை அவர் நடத்திய வரலாறு எல்லாம் பாவம் பன்னீர்செல்வத்திற்கு தெரிந்திருக்க வழியில்லை.

வேண்டுமென்றால் சட்டமன்றத்தில் உள்ள இது பற்றிய பதிவேடுகளை படித்துப் பார்க்கலாம். அப்படியே 15.8.91 அன்று கோட்டையில் கொடியேற்றிய அன்றைய முதல்வர் ஜெயலலிதா “கச்சதீவை மீட்டே திருவேன்” என்று போட்ட சபதத்தையும் கூடவே படித்துப் பார்க்கலாம். இந்திய – இலங்கை நல்லுறவிற்காகவே கச்சத்தீவு விட்டுக் கொடுக்கப்பட்டது என்று அன்றைய பிரதமர் நரசிம்மராவுக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதா 30.9.1994 அன்று எழுதிய கடிதத்தைக் கூட இனியாவது படித்து பயன்பெறலாம்; உண்மையை அறிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டிற்கான திட்டங்களைத் தடுத்து விட்டதாக பன்னீர்செல்வம் கூறுகிறார். அப்படி ஒரு திட்டத்தை சுட்டிக்காட்ட முடியுமா? தென் மாவட்டங்களின் பொருளாதாரத்தையும் அங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் கொடுக்கும் சேது சமுத்திரத் திட்டத்தை தடுத்து நிறுத்தியது யார்?

உச்ச நீதிமன்றத்தில் முதல்வர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டே இந்தத் திட்டத்தை அனுமதிக்க கூடாது என்று வழக்குப் போட்டவர்தானே மறைந்த ஜெயலலிதா?

தான் வாழும் தென் மாவட்டப் பகுதிக்கான இந்தத் திட்டத்தை அதிமுக ஆட்சியே தடுத்தபோது பன்னீர்செல்வம் எங்கு இருந்தார்?

மதுராவயல்–துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைப் பாழ்படுத்தியது யார்?

புதிய தலைமைச் செயலகத்தைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கியது யார்? அப்படிப்பட்ட அலங்கோல ஆணவ தமிழக விரோத அதிமுக அமைச்சரவையில்தான் ஓ.பன்னீர்செல்வமும் பதவி சுகம் அனுபவித்துக் கொண்டு இருந்தார்.

மெட்ரோ ரயில் வேண்டாம். மோனோ ரயில் போதும் எனப் பேசி மெட்ரோ ரயில் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி விட்டு பிறகு வேறு வழியின்றித் துவங்கியது யார் ஆட்சி? அதிமுக ஆட்சிதானே!

காவேரியில் 14.75 டிஎம்சி தண்ணீர் உரிமையை தமிழ்நாடு இழந்து விட்டு நிற்பதற்கு அதிமுகதான் காரணம் என்பதை பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தெரியாதா அல்லது தர்மயுத்தம் போல் அதையும் மறந்துவிட்டாரா? காவிரி நடுவர் மன்றம், இடைக்காலத் தீர்ப்பு பெறும் உரிமை, இறுதித் தீர்ப்பு, பிரதமர் தலைமையில் காவிரி நதிநீர் ஆணையம் எல்லாவற்றையும் அமைத்துக் கொடுத்தவர் காவிரி மைந்தரான எங்கள் கருணாநிதி.

ஆனால் நடுவர் மன்றத் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பு, இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் அமைந்த காவிரி மேலாண்மை ஆணையம் அனைத்தையும் பிசுபிசுக்க வைத்து இன்றைக்குக் காவிரிப் பிரச்சினையில் ஒரு தீர்வையும் எட்ட முடியாத நிலைக்குக் கொண்ட வந்தது அதிமுக ஆட்சிதான் என்பதை ஓ.பன்னீர்செல்வத்திற்கு நினைவூட்டக் கடமைப்பட்டுள்ளேன்.

அதுமட்டுமல்ல, எதிர்க்கட்சி வரிசையில் இருந்துபோது கூட, காவிரி உரிமை மீட்புப் பயணம் நடத்தி, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டியவர் எங்கள் முதல்வர் ஸ்டாலின் என்பதை நாடறியும்! கூட்டாட்சித் தத்துவத்திற்காக ராஜமன்னார் குழு அமைத்து அறிக்கை பெற்று அதன் அடிப்படையில் மத்திய அரசு மத்திய, மாநில உறவுகள் குறித்து சர்க்காரியா கமிஷன் அமைக்க வழிவகுத்தது திராவிட முன்னேற்றக் கழகம். ஆனால் அதிமுகவிற்கும் கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதற்கு ஓபிஎஸின் கடிதமே சாட்சியமாக நிற்கிறது.

அடுத்து அவர் நிதி பற்றி பேசுகிறார். நான் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான். ஓ.பன்னீர்செல்வம் நிதி அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் போது தமிழ்நாட்டின் கடன் 5 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல்! அப்படி கடன் வாங்கி ஊழல் செய்து தமிழ்நாட்டை கடனாளி மாநிலமாக்கி விட்டுப் போனவர்கள் 10 ஆண்டு ஆட்சியில் இருந்தபோது மத்திய அரசிடம் நிதி சுதந்திரத்தைப் பெற முடியாதவர்கள் இன்றைக்கு திமுக மீது பழி போட முனைவதைப் பார்த்தால், கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர் என்று தொடங்கும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பில் இணையாமல் இருப்பது அதிமுகவின் விருப்பம். ஆனால் நீட் தேர்வு ரத்து போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று எங்கள் கழகத் தலைவரைப் பார்த்துச் சொல்லும் ஓ.பன்னீர்செல்வம் இன்று கூட்டப்பட்ட மிக முக்கியமான நீட் கூட்டத்திற்கு கூட வராமல் போனது ஊருக்கு உபதேசம் என்ற இன்னொரு பழமொழியை நினைவு படுத்துகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை தலைவராக ஏற்றுக்கொண்டு இருந்த ஓ.பன்னீர்செல்வம் பாஜகவின் அழுத்தத்தை தாங்க முடியாமல் எப்படி பழனிசாமியையும், முதல்வராக ஏற்றுக் கொண்டு இருந்தாரோ, அதேபோல் மத்திய பாஜக அரசு நீட் விதிவிலக்கு மசோதாவை ஆளுநர் மூலம் நிராகரித்ததை திசைதிருப்ப எங்கள் கழகத் தலைவருக்கு ஏழு பக்கம் கடிதம் எழுதியிருக்கிறார் என்றே தோன்றுகிறது. பாஜகவின் தயவை இப்போதும் பெற எங்கள் கழகத் தலைவரை விமர்சிக்கும் கட்டாயம் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஏற்பட்டிருக்கிறது.

ஏனென்றால் எங்கள் தலைவரை விமர்சித்தால் மட்டுமே தங்களுக்குப் பிழைப்பு என்று இருப்பவர்கள் சமூகநீதி கூட்டமைப்பில் இணைய மாட்டோம் என்பதில் வியப்பும் இல்லை; கடிதம் எழுதுவதில் புதிரும் இல்லை!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு, தங்கள் பழவினையால், சமூகநீதி சமத்துவ விரோத பாஜகவுக்குப் பல்லக்குத் தூக்குவதே தலையாய பணியாக இருப்பதைத்தான் அவரது அறிக்கை உணர்த்துகிறது.”

இவ்வாறு தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.