வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொச்சி-போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தொடரப்பட்ட வழக்கில் சிக்கியுள்ள பிரபல மலையாள நடிகர் திலீப்புக்கு எதிராக, புதிதாக இரண்டு ‘ஆடியோ’க்களை, திரைப்பட இயக்குனர் பாலசந்திரகுமார் வெளியிட்டுள்ளார்.
பிரபல மலையாள நடிகர் திலீப் மீது, ஏற்கனவே நடிகையை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பான வழக்கு உள்ளது. இந்நிலையில் அந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகளை கொல்வதற்கு திட்டமிட்டதாக, திலீப் உள்ளிட்டோர் மீது குற்ற சதி வழக்கும் நிலுவையில் உள்ளது. திலீப் உள்ளிட்டோர் முன்ஜாமின் கோரிய வழக்கில் கேரள உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.
திரைப்பட இயக்குனர் பாலசந்திரகுமார் வெளிப்படுத்திய ஆவணங்கள், ஆதாரங்களின் படியே, திலீப் மீது, சதி குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இயக்குனர் பாலசந்திரகுமார், நேற்று புதிதாக இரண்டு, ‘ஆடியோ’க்களை வெளியிட்டுள்ளார்.அதில் திலீப்பின் சகோதரர் அனுாப் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
‘ஒருவரை கொலை செய்ய முடிவு செய்து விட்டால், கூட்டத்தில் வைத்து செய்ய வேண்டும்’ என, அனுாப் பேசியதாக ஒரு ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கொஞ்சம் நாட்களுக்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். போன்களை ஒட்டுக் கேட்க வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும்’ என, அனுாப் பேசியதாக மற்றொரு ஆடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆடியோக்கள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement