ராஜபக்சவினருக்கு கிரேக்கத்தின் ஜோர்ஜிக்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படுமா? தப்பிக்கும் முறையை கண்டுபிடித்தார்களா?


“ஜோர்ஜ் பேபன்ரூ (George Papandreou) உடனடியாக விலக வேண்டும், அவருக்கு பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய முடியவில்லை”

இது கடந்த 2011 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்கள் வீதியில் இறங்கி எழுப்பிய போராட்ட கோஷம்.

பேபன்ரூ குடும்பம் கிரேக்க நாட்டில் உள்ள பலமான அரசியல் குடும்பம்.

சரியாக இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தை போன்ற குடும்பம். இவரது பாட்டனார் பல முறை கிரேக்கத்தின் நாட்டின் பிரதமராக பதவி வகித்துள்ளார். அவரது தந்தையும் பிரதமராக பதவி வகித்தார். கிரேக்க நாட்டின் மிகப் பழமையான பெசோ கட்சியை உருவாக்கியதும் இவரது தந்தையே. 2009 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரும்பான்மையை பெற்று ஜோர்ஜ் பேபன்ரூ நாட்டின் பிரதமராக தெரிவானார்.


“பேபன்ரூவின் குடும்பம் கிரேக்க நாட்டின் பணத்தை கொள்ளையிட்டுள்ளது. அவர்களை அழிக்க முடியாது”

இது 2009 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பிரதமராக தெரிவான போது கிரேக்கத்தில் மாத்திரமல்ல உலக நாடுகளின் அரசியல் அவதானிகள் கூறியது.

தேசப்பற்று என்பது பேபன்ரூவின் குடும்பம் மற்றும் பெசோ கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலாக இருந்தது”

எனினும் எவரும் எதிர்பார்க்காத ஒன்று 2009 ஆம் ஆண்டு ஜோர்ஜ் பேபன்ரூவின் அமோக வெற்றிக்கு பின்னர் நடந்தது. கிரேக்கத்தில் மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி உருவானது. ஜோர்ஜ் பிரதமராக பதவியேற்ற சரியாக இரண்டு வருடங்களில் அந்த பொருளாதார நெருக்கடி உச்ச நிலைமைக்கு வந்தது.

ஜோர்ஜின் இயலாமை காரணமாக இந்த பொருளாதார நெருக்கடி உருவானதாக கிரேக்க மக்கள் கூறினர்.

எனினும் ஜோர்ஜ் ஆட்சிக்கு வரும் போது நாட்டின் பொருளாதாரம் பூஜ்ஜியமாக இருந்தது என கிரேக்கத்தின் பொருளாதார நிபுணர்கள் கூறினர். அவர் அந்த பிரச்சினைக்கு தீர்வுகாணாது எந்த நெருக்கடியும் இல்லை என நாட்டுக்கு காட்டியதால், நெருக்கடி கிரேக்கத்தை மூழ்கடிக்கும் சுனாமியாக மாறியது எனவும் விமர்சித்திருந்தனர்.

இந்த பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கையறு நிலைக்கு தள்ளப்பட்டார். பாட்டனார் மற்றும் தந்தை ஆகியோரின் வீண் பேச்சுகளை கேட்க மக்கள் தயாராக இருக்கவில்லை. தேசப்பற்று என்பது தொடர்ந்தும் விற்பனை செய்யக் கூடிய கோஷமாக இல்லாமல் போனது.

எதுவும் முடியாத நிலைமையில், ஜோர்ஜ் தன்னை நம்பும் யோசனையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றினார். யோசனை வெற்றி பெற்றதும் ஜோர்ஜ் மற்றும் அவரது கட்சியினர் உத்வேகம் பெற்றனர்.

நெருக்கடியில் இருந்து மீள ஜோர்ஜ் அரசுக்கு பிரபலமில்லாத முடிவுகளை தற்போது எடுக்க முடியும் என சர்வதேச ஆய்வாளர்கள் கூறினர்.

கிரேக்கத்தின் ஸ்திரமற்ற நிலைமை முடிவுக்கு வந்து விட்டதாக ஜோர்ஜ் பெருமிதமாக கூறினார். எனினும் ஜோர்ஜால் நெருக்கடியில் இருந்து வெற்றி பெறும் இயலுமையோ திடமோ இருக்கவில்லை.

இடைக்கால அரசாங்கத்தை அமைத்து இந்த பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்போம் என ஜோர்ஜ், கிரேக்க எதிர்க்கட்சித் தலைவரான அந்தோணியோ சமாரஸிடம் (Antonio Samaras) யோசனை முன்வைத்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அந்த யோசனையை நேரடியாக நிராகரித்தார். இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படுமாயின் ஜோர்ஜ் பதவி விலக வேண்டும் எனவும் கட்சி சார்பற்ற பிரதமர் ஒருவர் அரசாங்கத்தின் தலைவராக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் யோசனை முன்வைத்தார். எனினும் ஜோர்ஜ் அதனை செய்ய தயக்கம் காட்டினார்.

“உங்களால் நெருக்கடிக்கு தீர்வு காணாது அதிகாரத்தை பிடித்துக்கொண்டிருந்தால், உங்களது குடும்பமும் கட்சியும் அழிந்து போகும். இந்த நேரத்தில் அதிகாரத்தை கைவிடுங்கள்”

இது ஜோர்ஜின் ஆலோசகர்கள் அவருக்கு கூறிய ஆலோசனை. ஜோர்ஜ் பிரதமர் பதவியில் இருந்து விலக விருப்பம் வெளியிட்டார். பொருளாதார நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வர உதவுவதற்கு முன்வந்த சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன முன்வைத்த கடும் நிபந்தனைகளே ஜோர்ஜ் பதவி விலகும் முடிவை எடுக்க காரணமாக அமைந்தது.

நெருக்கடிக்கு தீர்வுகாண பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம். எதிர்க்கட்சிக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இணக்கப்பாடு அவசியம் என சர்வதேச நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியம் ஜோர்ஜிக்கு அழுத்தங்களை கொடுத்தன.

தேசிய ஒருங்கிணைந்த அரசாங்கத்தை அமைத்தால் மாத்திரமே நெருக்கடிக்கான நிவாரண பொதியை வழங்க முடியும் என நாணய நிதியமும் ஐரோப்பிய ஒன்றியமும் முழு உலகமும் கேட்கும்படியாக கூறின.

ஜோர்ஜ் பதவி விலகிய பின்னர், கிரேக்கத்தின் எதிர்க்கட்சித் தலைவரின் இணக்கத்தின் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மத்திய வங்கியின் உப தலைவர் பிரதமராக பதவியேற்றார்.

அவர் கட்சி சார்பற்ற பொருளாதார நிபுணர்.

இடைக்கால அரசாங்கத்தை அமைத்து உடனடியாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்பது எதிர்க்கட்சித் தலைவரின் நிபந்தனையாக இருந்தது. கட்சி சார்பற்ற பிரதமர் அந்த நிபந்தனையை நிறைவேற்றினார்.

எனினும் பொதுத் தேர்தலில் எவருக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இதனால், எவராலும் தனித்து ஆட்சியமைக்க முடியாமல் போனது. எனினும் பல தேர்தல்களுக்கு பின்னர், நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் பெரும்பான்மையான ஆசனங்களை கைப்பற்றி பிரதமராக பதவியேற்றார்.

2009 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 48 சத வீத வாக்குகளை பெற்ற ஜோர்ஜின் பெசோ கட்சி படுதோல்வியடைந்ததுடன் 5 சத வீத வாக்குகளை மாத்திரமே பெற்றது. கிரேக்க நாட்டின் மிகப் பழமையான பிரபலமான கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையை உலக அரசியல் அமைதிப்படுத்தல் என வர்ணித்தது.

ராஜபக்ச குடும்பத்தினருக்கும் பேபன்ரூ குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படுமா?

 ராஜபக்ச குடும்பத்தினர் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி என்பது கிரேக்க நாட்டையும் விட மிக மோசமான பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடிக்கு ராஜபக்சவினரிடம் தீர்வு இல்லை என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது.

கிரேக்க நாட்டின் ஜோர்ஜிக்கு விதித்த நிபந்தனைகள் தமக்கு விதிக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே ராஜபக்சவினர் சர்வதேச நாணய நிதியம், அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் செல்லாமல் தயங்கி வருகின்றனர்.

அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு தான் மற்றும் நாடு ஆகிய இரண்டும் அழிந்து போவதை காண்பதை விட அதிகாரத்தை கைவிட்டு நாட்டை காப்பாற்றுவது சிறந்த முடிவு என ஜோர்ஜ் எண்ணினார்.

எனினும் ராஜபக்சவினர் நெருக்கடிக்கு முடிவு காண்பதற்கு பதிலாக அதிகாரத்தை பாதுகாக்கக் கூடிய முறையை தேடுகின்றனர்.

இதன் காரணமாக புதிய அரசியலமைப்புச் சட்டம் ராஜபக்சவினரின் இரட்சிக்கும் சேனையாக இருக்கின்றது.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் போர்வையில் பொதுத் தேர்தலுக்கு சென்று தன்னை தற்காத்து கொள்ள அரசாங்கம் முயற்சிப்பதாக மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறினார்.

அரசாங்கம் இந்த நேரத்தில் விரும்பும் தேர்தல் சர்வஜன வாக்கெடுப்பு. புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படலாம். அப்படியில்லை என்றால் அரசாங்கத்திற்கு இருக்கும் ஒரே மாற்றி வழி பொதுத் தேர்தல். பொதுத் தேர்தலை நடத்தி தோல்வியடைந்தாலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதே இதற்கு காரணம்.

அரசாங்கம் மூன்று தேர்தல்களை நடத்த அஞ்சுகிறது. உள்ளூராட்சி, மாகாண சபை மற்றும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த அரசாங்கம் அஞ்சுகிறது. உள்ளுராட்சி சபைத் தேர்தலை நடத்தி அரசாங்கம் தோல்வியடைந்தால், அரசாங்கம் தானாக கவிழும் என்பது மாத்திரமல்ல உள்ளூராட்சி சபைகள் எதிரணிக்கு செல்லும் என்பதை அரசாங்கம் அறியும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்தினாலும் இதுவே நடக்கும். மாகாண சபைகள் எதிர்க்கட்சியிடம் சென்றால், உள்ளுராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் இன்றி தேசிய தேர்தல் ஒன்றை அரசாங்கத்தால் நடத்த முடியாது.

அன்று 2011 ஆம் ஆண்டு கிரேக்கத்தின் ஜோர்ஜ் முயற்சித்ததும் இன்று ராஜபக்சவினர் மேற்கொள்ளும் முயற்சியை போல் தமது பலத்தை காண்பித்து நெருக்கடியை மூடிமறைக்கும் முறை. ஜோர்ஜ் தேர்தலுக்கு செல்லவில்லை. அவர் நாடாளுமன்றத்திற்கு சென்று தன் ஆதரவாக நம்பிக்கை யோசனையை கொண்டு வந்தார்.

எனினும் தனது பலத்தை காண்பித்து நெருக்கடியில் இருந்து வெற்றி பெறவோ மூடிமறைக்கவோ முடியாது என்பதை அவர் பின்னர் உணர்ந்தார். இதன் காரணமாகவே இறுதியில் அவர் பிரதமர் பதவியில் இருந்தும் விலக நேரிட்டது.

ஜோர்ஜை போன்று ராஜபக்சவினருக்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளை கைவிட நேரிடுமா..?

அந்த இடத்திற்கு செல்லாது தப்பிக்கும் முறை குறித்து தற்போது வரை ராஜக்சவினரிடம் முன் யோசனைகள் எதுவுமில்லை.

இதனால், ராஜபக்சவினர் கொடுப்பதை உண்டு விட்டு, நடப்பதை பார்த்துக்கொண்டிருக்கும் அரசியலையே செய்து வருகின்றனர் என்பது மாத்திரம் உறுதி.


கட்டுரையாளர்: உபுல் ஜோசப் பெர்னாண்டோ


மொழியாக்கம்: ஸ்டீபன் மாணிக்கம் 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.