பிரபல பாடகியான
லதா மங்கேஷ்கர்
கொரோனா வைரஸ் பாதிப்பால் மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 92.
60 ஆண்டுகளுக்கும் மேலாக பாடி வந்த லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் வீடியோ வெளியிட்டுள்ளார் இசைஞானி
இளையராஜா
.
லதா மங்கேஷ்கர் பற்றி பலரும் அறியாத விஷயத்தை சொன்ன சின்மயி
அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
இந்திய திரைப்பட இசை உலக வரலாற்றில் கடந்த 60, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய தெய்வீக, காந்தர்வ குரலால் உலக மக்களை எல்லாம் மயக்கித் தன் வசத்தில் வைத்திருந்த திரு. லதா மங்கேஷ்கர் அவர்கள் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வேதனையை எப்படி போக்குவேன் என்பது எனக்கு தெரியவில்லை. அவருடைய இழப்பு இசை உலகத்திற்கு மட்டும் அல்ல இந்த உலகிற்கே மாபெரும் இழப்பாகும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. ஆஷாஜி அவர்களுக்கும், திரு. ஹ்ருதயநாத் மங்கேஷ்கர் அவர்களுக்கும், திரு. உஷா மங்கேஷ்கர் அவர்களுக்கும் என் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.