பெங்களூரு: ஹிஜாப் தடையால் பெண் கல்வி மேலும் பாதிக்கப்படும் என ஐக்கிய ஜனதா தள தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் தேசிய மனித உரிமை ஆணையத்திலும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய இடங்களில் உள்ள அரசு பி.யூ. கல்லூரிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள் நேற்று ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சர்ச்சை பூதாகரமாகிவிட, கர்நாடக உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா கூறும்போது, “மாணவர்கள் கல்லூரிக்கு வருவது வழிபாடு நடத்த அல்ல.மத அடையாளங்களை வழிபாட்டு தலங்களுடன் நிறுத்திக் கொள்ளவேண்டும். ஹிஜாப், காவித் துண்டு ஆகியவற்றை கல்லூரிக் குள் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இந்தியர்கள் என்ற ஒன்றுபட்ட மனோநிலைக்கு வர வேண்டும். அனைத்து மாணவர்களும் பாரத மாதாவின் பிள்ளைகள் என்பதை உணர வேண்டும்” என்றார்.
இந்நிலையில் ஹிஜாப் தடை குறித்து எச்.டி.குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக அரசியல் நடக்கிறது. ஒருபுறம் பாஜக பேட்டி பச்சாவ்; பேட்டி படாவ் (பெண் பிள்ளைகள் கற்கட்டும், பாதுகாப்பாக இருக்கட்டும்) எனக் கூறுகிறது.
இன்னொரு பக்கம் பேட்டி ஹட்டாவ் ( பெண் குழந்தையை விலக்கி வையுங்கள்) என்றல்லவா நடந்து கொள்கிறது. முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மைக்கு அவரது அமைச்சர்கள் மீதே கட்டுப்பாடு இல்லை. அமைச்சர்கள் ஆளுக்கொருபுறம் கட்டுப்பாடின்றி கருத்துகளைக் கூறுகின்றனர். பள்ளிகளில் ஹிஜாப் அணிவிதில் புதிய விதிமுறைகளைப் புகுத்த வேண்டாம். இத்தகைய கெடுபிடிகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும்” என்றார்.