36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்- இந்தியாவின் இசைக்குயில் விடைபெற்றது

இந்தியாவின் ‘நைட்டிங்கேல்’ என்று புகழ்பெற்ற இசைக்குயில் விடைபெற்றது. 36 மொழிகளில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய இசைக்குயிலின் குரல் இன்றுடன் முடிந்தது.

இந்தியாவின் புகழ்பெற்ற பழம்பெரும் இந்தி பாடகி லதா மங்கேஷ்கர் 1929-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28-ந் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பண்டிட் தீரநாத் மங்கேஷ்கருக்கும், செவந்திக்கும் மகளாக பிறந்தார்.

லதா மங்கேஷ்கரின் தந்தை ஒரு கிளாசிகல் பாடகர் மற்றும் நாடக கலைஞராக இருந்தார். இதனால் தன்னுடைய 4-வது வயதிலேயே தந்தையிடம் இசை பயில தொடங்கினார்.

பின்னர் புகழ்பெற்ற அமான் அலிகான் சாகிப் மற்றும் அமநாத்கான் ஆகியோரின் கீழ் இசைப்பயிற்சி மேற்கொண்டார்.

1942-ம் ஆண்டு சினிமா துறையில் பாடத் தொடங்கிய அவர் முதல் முதலாக ‘கிதி ஹசால்’ என்ற மராத்திய பாடலை பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்துவிடவே குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் ‘மஜ்பூர்’ என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார். இது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து வந்த ‘மகால், அந்தாஸ், பர்சாத், துலாரி’ போன்ற படங்கள் பெரும் புகழை பெற்றுக் கொடுத்தது.

அனில் பிஸ்வாஸ், ஷங்கர், ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி.பர்மன், ராம்சந்திரா, ஹேமந்த் குமார், சலீம் சவுத்ரி, கயாம் ரவி, ரஜ்ஜத் உசைன், ரோஷன் கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் ஜேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், உஷா கண்ணா ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனுமாலிக், ஆனந்த்மிலிந்த், ஷீவ்கரி, ராம்லட்சுமன், ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசை அமைப்பாளர்களின் இசையிலும் அவர் பாடியுள்ளார்.

லதா மங்கேஷ்கர் பாடிய பல பாடல்கள் இன்றளவும் இந்திய ரசிகர்களால் கவரப்பட்டு வருகிறது. நவ்ஷாத் இசையில் முகல் ஆஸம் (1960) என்ற படத்தில் ‘பியார் கியா டு டர்ணா கியா’ என்ற பாடல் ‘அஜீப் தாஸ்டீன் ஹை யே’ (தில் அப்னா அவுர் ப்ரீத் பரய்’- 1960) உள்ளிட்ட ஏராளமான பாடல்கள் புகழ்பெற்றவை.
தமிழில் சத்யா படத்தில் வரும் ‘வளையோசை கல கல’ என்ற பாடல் பெரும் பெயரை பெற்றுத்தந்தது. பிரபு நடிப்பில் ஆனந்த் படத்தில் பாடிய ‘ஆராரோ… ஆராரோ…’ என்ற பாடலும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தது. லதா மங்கேஷ்கர் தமிழ், இந்தி, பல்வேறு மொழிகளில் அவர் பாடியுள்ளார். மொத்தம் 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருந்தார். 70 ஆண்டுகள் அவர் இந்திய ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பெற்று இருந்தார்.

லதா மங்கேஷ்கர் டெல்லி மேல்சபை எம்.பி.யாகவும் பணிபுரிந்துள்ளார். 1999-ம் ஆண்டு அவர் இந்த பொறுப்பை ஏற்றிருந்தார். நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதான பாரத ரத்னா, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தேசிய விருது, தாதா சாகேப் பால்கே விருது, நான்கு தலைமுறைக்கு மேல் பிலிம்பேர் விருது என பல விருதுகளை பெற்று அவர் சாதனை படைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.