இதை செய்தால் வெற்றி அதிமுகவிற்கு தான்.. பூங்குன்றன் கொடுத்த ஐடியா.!!

அதிமுகவில் முன்னாள் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தற்போது பொறுப்பில் இல்லாத தகுதி வாய்ந்தவர்களை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், சென்னை தவிர மற்ற மாநகராட்சித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் பார்த்தேன். பணிக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற பணிக்குழு அவசியம் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. மாவட்ட கழகச் செயலாளர்கள் பெயர்கள் தான் அதிக அளவில் பட்டியலில் இடம் பெற்றிருந்தன. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தானே அந்த மாவட்டத்தின் பொறுப்பாளர்கள். இதில் சந்தேகம் இல்லையே! 

முன்னாள் தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தற்போது பொறுப்பில் இல்லாத தகுதி வாய்ந்தவர்களை நியமிக்க வேண்டும். அதுவே கூடுதல் வலிமை தரும். உதாரணமாக முன்னாள் சபாநாயகர் தனபால், திருச்சி ரத்தினவேல், செ ம வேலுசாமி, டாக்டர் மைத்ரேயன், திருப்பூர் சிவசாமி போன்றவர்களை பயன்படுத்தலாம். டாக்டர் விஜயபாஸ்கரை பக்கத்து மாநகராட்சிக்கு பொறுப்பாளராக நியமித்திருக்கலாம். இது போன்ற திறமையானவர்கள் மாவட்டம் தோறும் பலர் இருக்கிறார்கள். பட்டியலிட்டால் குழப்பமாக இருக்கும். அமைப்புச் செயலாளர்களே பலர் இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்களை நியமிக்கும் போது அந்த சமூகத்தினரும், அவரை விரும்புகிறவர்களுக்கும் வேகத்தோடு பணியாற்ற வாய்ப்பாக இருக்கும். ஒதுங்கி இருப்பவர்களையும் எதிர்காலம் நமக்கு இருக்கிறது என்பதை உணர வைக்கும். அது வெற்றி வாய்ப்பை எளிதில் பெற்றுத் தரும். காலம் ஒரு பக்கம் எப்போதும் நிற்காது சுழன்று கொண்டிருக்கும். எனவே அரவணையுங்கள் ஆற்றல் கிடைக்கும்.

நியமிக்கப்பட்டவர்கள் திறமையானவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கூடவே சிலருக்கு வாய்ப்பு தந்திருக்கலாமோ! என்பது என் ஏக்கம். இது ஆலோசனையே! ஏற்பது உங்கள் விருப்பம். கழகத்தின் சார்பில் நிற்கும் வேட்பாளர்கள் வெற்றி பெற இதயதெய்வங்கள் ஆசி துணை நிற்கட்டும் என தெரிவித்துள்ளார்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.