‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி; கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி நிச்சயம் என அதிகாரிகள், பயிற்சியாளர் அறிவுரை

சென்னை: அரசு பணியில் சேர விரும்பும்இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்று அரசுத்துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சியில் அறிவுரை வழங்கியுள்ளனர்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் நடத்தியது. இதில் பங்கேற்ற கருத்தாளர்களின் உரை விவரம் வருமாறு:

ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்ட சப்-கலெக்டர் (பெர்ஹாம்பூர்) வெ.கீர்த்திவாசன் ஐஏஎஸ்: சிவில் சர்வீசஸ் என்பது ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் என 24 விதமான உயர் பதவிகளுக்காக யுபிஎஸ்சி நடத்தும் மிகப்பெரிய தேர்வு. முதலில் தேர்வுக்கான பாடத்திட்டத்தை நன்கு தெரிந்துகொள்ள வேண்டும். பாடத்திட்டம் அதிகம்தான். அதேநேரம், பாடத்திட்டத்தை தாண்டி கேள்விகள் கேட்கப்படுவது இல்லை. தேர்வாளர்களிடம் இருந்து யுபிஎஸ்சி என்ன எதிர்பார்க்கிறது என்பது முக்கியம்.

பொது அறிவு தாளுக்கு அடிப்படையாக இருப்பவை சிபிஎஸ்இ, என்சிஇஆர்டி புத்தகங்கள். இவை தவிர கூடுதலாக ஏதேனும் ஒருகுறிப்பு புத்தகத்தை பயன்படுத்தினால் போதும். முதல்நிலை தேர்வுக்கு தயாராகும்போதே மெயின் தேர்வுக்கும் சேர்த்து படிக்க வேண்டும். காரணம் இரு தேர்வுகளுக்கும் இடைப்பட்ட கால இடைவெளி மிகவும் குறைவாக இருக்கும்.

முதல்நிலை தேர்வுக்கு முன்பாக 100 மாதிரி தேர்வுகளாவது எழுதிப் பயிற்சி பெறுவது நல்லது. மெயின்தேர்வை பொருத்தவரை, விடையளிக்கும் விதம் புதுமையாக இருப்பது சிறந்தது. விடையளிக்கும்போது நிறைய படங்கள், சார்ட்கள், வரைபடங்கள் இடம்பெறுவது நல்ல மதிப்பெண்கள் பெற்றுத் தரும்.

ஆளுமைத் திறன் தேர்வு நமது ஒட்டுமொத்த ஆளுமையை வெளிப்படுத்தக்கூடிய தேர்வாக இருக்கும்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் ப.கவுசல்யா: எங்கள் குடும்பத்தில் நான்தான் முதல்முறையாக பட்டப் படிப்பை முடித்தவள். அரசு பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து, அரசு கல்லூரியில் பட்டம் பெற்றேன். இளங்கலை 2-ம் ஆண்டு படித்தபோது 2012-ல் குரூப் 4 தேர்வு எழுதி பள்ளிக்கல்வித் துறையில் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்தேன். அதன்பிறகு இறுதி ஆண்டு பாடங்களை எழுதி வெற்றி பெற்று, 2018-ல் குரூப் 2 தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணி கிடைத்தது. அதைத் தொடர்ந்து, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை ஆட்சியர் ஆனேன். ‘அரசு வேலைதான் கிடைத்துவிட்டதே’ என்று குரூப் 4 பணியிலேயே நான் தேங்கிவிடவில்லை.

டிஎன்பிஎஸ்சி தேர்வை பொருத்தவரை 6 முதல் 10-ம்வகுப்பு வரை அனைத்து பாடப் புத்தகங்களையும் படிக்க வேண்டும். தொடர்ந்து ஒரே பாடத்தைப் படிக்காமல், அறிவியல், வரலாறு, கணிதம், பொது அறிவு என மாறி மாறிபடித்தால் சலிப்பு வராது. நிறைய மாதிரி தேர்வுகள் எழுதிப் பார்க்கவேண்டும். அரசுப் பணியில் சேரவிரும்பும் இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும்.

சங்கர் ஐஏஎஸ் அகாடமி முதுநிலை பயிற்சியாளர் எஸ்.சந்திரசேகர்:எங்கள் நிறுவனர் சங்கரால் கடந்த2004-ம் ஆண்டு 36 மாணவர்களுடன் தொடங்கப்பட்டதுதான் சங்கர் ஐஏஎஸ் அகாடமி. தற்போது ஆண்டுதோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எங்கள் நிறுவனத்தில் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி,டிஎன்பிஎஸ்சி, வங்கி பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு பயிற்சி பெறுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி முதல் அல்லது 2-வது வாரத்தில் சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வுக்கான அறிவிப்பை யுபிஎஸ்சி வெளியிடுகிறது.

முதல்நிலை தேர்வு மே இறுதிவாரம் அல்லது ஜூன் முதல்வாரம் நடைபெறும்.

இந்திய அளவில் சுமார் 11 லட்சம் பேர் முதல்நிலை தேர்வுக்கு விண்ணப்பித்தாலும் 6 லட்சம்பேர் மட்டுமே தேர்வு எழுதுவார்கள். அவர்களில் 1 லட்சம் பேர்மட்டுமே தேர்வுக்கு நன்கு படித்து எழுதக்கூடியவர்கள்.

கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிவில் சர்வீசஸ் தேர்வு தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கும் கருத்தாளர்கள் விளக்கம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை துணை ஆசிரியர் மு.முருகேசன் தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வை காணத் தவறியவர்கள் https://www.htamil.org/00234 என்ற லிங்க்கில் காணலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.