புதுடெல்லி: ஹைதராபாத் மக்களவை எம்.பி அசாதுதீன் ஒவைசியை மத்திய அரசின் ‘இசட்’ பிரிவு பாதுகாப்புச் சலுகையை ஏற்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது 2 பேர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் கார் சேதமடைந்தது. வேறொரு காரில் ஏறி ஒவைசி டெல்லி சென்றார். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் கைது நடவடிக்கையையும் போலீஸ் மேற்கொண்டுள்ளது. இதனிடையே, ஒவைசிக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் துப்பாக்கி ஏந்திய கமாண்டோ படையினரைக் கொண்ட ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால், அவர் மறுத்துவிட்டார்.
ஒவைசிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகையில், ‘‘இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒவைசிக்கு எந்த தகவலும் வரவில்லை. எனினும், இசட் பிரிவு பாதுகாப்பை ஒவைசி ஏற்க மாட்டார் என்று தெரிகிறது’’ என்று கூறின. ஆனால், மக்களவையில் நேற்று ஒவைசி பேசுகையில், ‘‘எனக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வேண்டாம். நான் முதல் தரமான ‘ஏ’ பிரிவு குடிமகனாக இருக்க விரும்புகிறேன். என் கருத்துகளை சொல்வதற்காக வாழ விரும்புகிறேன்’’ என்று நிராகரித்தார்.
இந்த நிலையில், ‘இசட்’ பிரிவு பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒவைசிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் இன்று பேசிய அமித் ஷா, “ஒவைசியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனவே புல்லட் புரூஃப் உடன் அவருக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க அரசு முடிவு செய்துளளது. இதனை ஏற்க மறுத்துவிட்டார்” என்றவர், “ஓவைசி ஜி, நீங்கள் இசட்’ பிரிவு பாதுகாப்பை ஏற்று, எங்கள் கவலைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்த சபை உறுப்பினர்கள் மூலமாக உங்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசிய அமித் ஷா, “இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் ஒவைசியின் வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் இருந்து பாதுகாப்பாக ஒவைசி வெளியேற்றப்பட்டாலும், அவரது வாகனம் சேதத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த மூன்று சாட்சிகள் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். சம்பவம் நடந்த உடனே உள்துறை அமைச்சகம் மாநில அரசிடம் இருந்து அறிக்கையை பெற்றது. மத்திய பாதுகாப்பு ஏஜென்சிகளின் அறிவுறுத்தலின் பேரில் உடனடியாக அவருக்கு பாதுகாப்பும் வழங்க முன்வந்தோம். ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னதாக, ஹபூர் மாவட்டத்தில் ஓவைசி சென்றது குறித்து அவர் தரப்பில் இருந்து எந்தத் தகவலும் மாவட்டக் கட்டுப்பாட்டு அறைக்கு முன்பே அனுப்பப்படவில்லை. திட்டமிடாமல் திடீரென அவர் சென்றுள்ளார்” என்று விளக்கம் கொடுத்தார் அமித் ஷா.