புதுடெல்லி: டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் சாந்திஸ்ரீ பண்டிட் முதல் பெண் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் உள்ள சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்துவரும் சாந்திஸ்ரீ பண்டிட் தற்போது புதுடெல்லி ஜேஎன்யுவுக்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
59 வயதான சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் ஜேஎன்யுவின் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கு அவர் தனது எம்ஃபில் படிப்பை முடித்து சர்வதேச உறவுகளில் (International Relations) ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.
இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சாந்திஸ்ரீ பண்டிட், முதன்முதலாக 1988ல் கோவா பல்கலைக்கழகத்தில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அதன்பிறகு 1993ல் புனே பல்கலைக்கழகத்திற்கு சென்றார். சாந்திஸ்ரீ மேலும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் நிர்வாகப் பதவிகளையும் வகித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎஸ்எஸ்ஆர்) மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான பார்வையாளர்களைப் பரிந்துரைக்கும் உறுப்பினராகவும் முக்கிய பொறுப்புகளில் சாந்திஸ்ரீ பங்கேற்றுள்ளார்.
சாந்திஸ்ரீ பண்டிட் பேராசிரியராக இருந்த காலங்களில் 29 பேருக்கு அவர் பிஎச்டி பட்டம் பெற வழிகாட்டி பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தின் பொறுப்பு துனை வேந்தராக இருந்த ஜகதீஷ் குமார், கடந்த வாரம் யுஜிசி தலைவராக நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தாராக சாந்திஸ்ரீ பண்டிட் நியமிக்கப்பட்டுள்ளார்.