தமிழகத்தில் 1967-க்கு பின் காங்கிரஸால் ஆட்சிக்கு வர முடியவில்லை – ராகுல் பேச்சுக்கு மக்களவையில் பிரதமர் மோடி பதிலடி

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி ‘1967-க்குப் பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை’ என்று தெரிவித்ததுடன், காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமர்சித்தார்.

கடந்த மாதம் 31-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரின் முதல் நாள் என்பதால் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையோடு அவை தொடங்கியது. அதன்பின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்று வந்தது. தீர்மானத்தின் மீதான விவாதங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மக்களவையில் பேசினார்.

“லதா மங்கேஷ்கர் முழு தேசத்தையும் ஒன்றிணைத்தார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாக இருந்தவர் அவர்” என்று பின்னணி பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது உரையை துவக்கிய மோடி, “கரோனா தொற்றுக்கு பிறகு உலக நாடுகளின் அளவுகள் மாறிவருகின்றன. நாங்கள் ஒரு தலைவராக அங்கீகரிக்கப்படுகிறோம். உலகத் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்கத் தயாராகி வருகிறது.

மத்திய அரசின் திட்டங்களால் ஏழைகள் லட்சாதிபதிகளாகி உள்ளனர். அரசு திட்டங்கள் மூலம் ஏழைகள் வீடுகளை கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர். ஏழைகளின் வங்கிக் கணக்கில் பணம் நேரடியாக சென்று சேர்க்கிறது. ஏழைத் தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயனடையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகளில் சிலர் இன்னும் 2014 மனநிலையிலேயே உள்ளனர். அவர்கள் யதார்த்தத்தில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளனர் என்று நினைக்கிறேன். கடந்த இரண்டு தசாப்தங்களாக பல மாநில மக்கள் காங்கிரஸ் ஆட்சிக்கு வாக்களிக்கவில்லை.

1967-க்கு பின் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியவில்லை. நாகாலாந்து மக்கள் 24 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸுக்கு வாக்களித்தனர். ஒடிசா மக்கள் 27 ஆண்டுகளுக்கு முன்பு உங்களுக்கு வாக்களித்தனர். 28 ஆண்டுகளுக்கு முன்பு கோவாவில் முழுப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றீர்கள்.

1988-ல் திரிபுரா காங்கிரஸ் ஆட்சி அமைந்திருந்தது. 1972-ல் மேற்கு வங்கம். அதன்பிறகு என்ன ஆனது? தெலங்கானா மாநிலத்தை உருவாக்கியதற்காக நீங்கள் பெருமை கொள்கிறீர்கள். ஆனால், பொதுமக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி பல மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியில் தொடர மக்கள் விரும்பவில்லை. ஒருமுறை காங்கிரஸை நிராகரித்த மாநிலங்கள் மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. பல மாநிலங்களில் ஆட்சியை இழந்த பிறகும் காங்கிரஸின் ஆணவம் குறையவில்லை. அரசியல் கட்சிகள் குறித்து இங்கு ஒரு வீரர் பேசியதால் அதற்கு பதிலளிக்க வேண்டியதுள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசியவர், “கோவிட்-19 முதல் அலையின்போது காங்கிரஸ் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது. கோவிட்-19 முதல் அலையின்போது, முழு உலகமும் மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால், இந்த வரம்புகளையும் தாண்டி உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் மும்பையில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல காங்கிரஸ் தூண்டியது. காங்கிரஸ்தான் மக்களை கஷ்டத்தில் தள்ளியது. அதே நேரத்தில், டெல்லி அரசாங்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நகரத்தை விட்டு வெளியேறச் சொன்னது. இதன் விளைவாக, பஞ்சாப், உ.பி மற்றும் உத்தராகண்டில் கோவிட் வேகமாக பரவியது” என்று பிரதமர் குற்றம்சாட்டினார்.

மேலும், “நீங்கள் என்னை எதிர்க்கலாம், ஆனால் நீங்கள் ஏன் ஃபிட் இந்தியா இயக்கம் (Fit India Movement) உள்ளிட்ட பிற திட்டங்களை எதிர்க்கிறீர்கள்?. எதிர்க்கட்சிகள் கடைப்பிடிக்கும் இந்தவகையான மக்கள் நலத்திட்ட எதிர் அரசியலால் அடுத்த 100 ஆண்டுகளுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் பல மாநிலங்களில் ஆட்சிக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. அடுத்த 100 ஆண்டுகள் உங்களால் ஆட்சிக்கு வரவே முடியாது. 100 ஆண்டுகளுக்கு மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நீங்கள் முடிவு செய்தால், அதற்கு நாங்களும் தயார்” என்று அவர் கூறினார்.

முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் நன்றி உரை மீதான விவாதத்தில், “உங்கள் வாழ்நாள் முழுவதும் தமிழக மக்களை உங்களால் ஆள முடியாது. அது உங்களால் முடியவே முடியாது” என்று பேசியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று தனது உரையில் காங்கிரஸ் குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.