''தேசிய அரசியலில், 'ஒற்றை நாயனம்' வாசிக்க சில கட்சிகள் முயற்சி'' – யாரைச் சொல்கிறார் கே.எஸ்.அழகிரி

தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டியின் தொடர்ச்சி…..

Also Read: ”கூட்டணி என்றாலே மகிழ்ச்சியும் நெருடலும் இருக்கத்தான் செய்யும்!” – ஒப்புக்கொள்கிறார் கே.எஸ்.அழகிரி

”கடந்த சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீட்டின்போது, தமிழகக் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வருத்தத்துக்குள்ளானது வெளிப்படையாகத் தெரிந்ததே?”

”அப்படியெல்லாம் எதுவும் இல்லை. நாங்கள் கேட்ட தொகுதிகளை எல்லாம் கொடுத்தார்கள். தேர்தலின்போதும் நாங்கள் போட்டியிட்ட தொகுதிகளில் மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்திப் பிரசாரம் செய்தார். போட்டி கடுமையாக இருந்த சில தொகுதிகளை நாங்கள் குறிப்பிட்டுச் சொன்னபோது, இரண்டாவது, மூன்றாவது முறையெல்லாம்கூட வந்து எங்களுக்காகப் பிரசாரம் செய்தார் மு.க.ஸ்டாலின். எனவே, நீங்கள் சொல்வது போன்றெல்லாம் எங்களுக்குள் எந்தவிதப் பிரச்னையும் இல்லை!”

தி.மு.க – காங்கிரஸ் பேச்சுவார்த்தை

”காங்கிரஸ் கட்சிக்கு 3 மேயர் இடங்கள் கேட்பதாக செய்திகள் வெளிவருகிறதே…. அப்படியென்றால், காங்கிரஸ் கட்சியிலிருந்து மேயர்களை எதிர்பார்க்கலாமா?”

”நிச்சயமாக…!”

”மேக்கேதாட்டு அணையை கட்டியே தீரவேண்டும் என கர்நாடக காங்கிரஸ் நடைபயணம் செல்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சி வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறதே?”

”மேக்கேதாட்டுவில், கர்நாடகா அரசு அணை கட்டக்கூடாது என்ற நமது உறுதியான கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தெரிவித்துள்ளது. அந்தக் கருத்தில் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்பதைப் பொதுவெளியிலும் தொடர்ந்து பேசிவருகிறேன். எங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களும் சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசிவருகிறார்கள்.

‘அணையைக் கட்டவேண்டும்’ என்று கர்நாடகா அரசு சொல்லிவருவது காவிரி ஒப்பந்தத்துக்கு விரோதமானது என்றால், ‘அணையைக் கட்டுவதற்கான ஆய்வைத் தொடங்கலாம்’ என்ற வரைவு அறிக்கை அனுமதியை கொடுத்த மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயல் பெருங்குற்றம். காவிரித் தண்ணீரைப் பயன்படுத்திவருகிற தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் அனுமதியைப் பெறாமலேயே இப்படியொரு அனுமதியை மத்திய அரசு அளித்து துரோகம் செய்திருக்கிறது.”

மேக்கேதாட்டூ

“காவிரி ஒப்பந்தத்துக்கு எதிராக அணையைக் கட்டச்சொல்லி கர்நாடக காங்கிரஸ் கட்சியும் அழுத்தம் கொடுக்கிறதுதானே….?”

”அது அந்த மாநில அரசியல். அதற்காக அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் இப்படியெல்லாம் செய்துவருகிறார்கள். ஆனால், தமிழகக் காங்கிரஸ் கட்சி ‘மேக்கேதாட்டு அணையைக் கட்டக்கூடாது’ என்ற விஷயத்தில் தெளிவாக உறுதியாக இருக்கிறோம். தொடர்ந்து எதிர்த்தும் வருகிறோம். நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம் இப்போது தமிழ்நாட்டில் இருக்கிறது. முதல்வரும் இதே கருத்தில்தான் உறுதியாக இருக்கிறார். எனவே, நாமும் அரசாங்கத்தோடு உறுதுணையாக இருந்துவருகிறோம். கர்நாடகா மாநில காங்கிரஸாரைப் போன்று நாமும் ஊர்வலமாக சென்றுதான் நமது கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்ற தேவை ஏற்பட்டால், அதையும் தமிழகக் காங்கிரஸ் கட்சி செய்யத்தான் போகிறது.”

”காவிரி விவகாரத்தில், தமிழக அரசுக்கு நீங்கள் முன்வைக்கின்ற கோரிக்கைதான் என்ன?”

”டெல்டா மாவட்டங்களில் விவசாயம்தான் அடிப்படை. ஆனால், வருடத்தின் சில மாதங்களில், காவிரித் தண்ணீரின்றி பயிர்கள் காய்ந்துபோகின்றன. மழைக் காலங்களிலோ வெள்ளத்தினாலும் பயிர்கள் அழுகிப்போகின்றன. எனவே, பெருமழைக் காலங்களின்போது நமது கொள்ளிடம் அணையைத் தாண்டி கடலில் சென்று கலக்கும் ஒரு லட்சம் கன அடித் தண்ணீரையும் நமது மாநிலத்திலேயே வறட்சிப் பகுதியை நோக்கித் திருப்பிவிட வேண்டும். மிதமிஞ்சிய தண்ணீரை இப்படிப் புதிய நீர்வழித் தடத்தின் வழியே திருப்பிவிடுவதால், வருடம் முழுவதும் விவசாயம் செழிப்பாக இருக்கும். இது காவிரி ஒப்பந்தத்தை மீறுவதாகவும் ஆகாது. இந்தக் கோரிக்கையை நமது முதல்வர் செய்துமுடித்துவிட்டால், இந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் அவரது மிகப்பெரிய சாதனையாக இது இருக்கும். விகடன் வழியே இந்தக் கோரிக்கையை முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் காங்கிரஸ் கட்சி வைக்கிறது.”

கே.எஸ்.அழகிரி, ஸ்டாலின்

”தேசிய அரசியலில், பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான பொறுப்பு காங்கிரஸுக்கு இருக்கிறது என்ற எதார்த்தத்தை ராகுல்காந்தி உணர்ந்திருக்கிறாரா?”

”இன்றைய சூழலில், இந்தியாவில் மிகப்பெரிய எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். இந்தக் கட்சியில்தான் பல்வேறு கருத்துகளையும் சொல்லக்கூடிய தலைவர்கள் நாடு முழுவதும் இருக்கிறார்கள். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தை ரொம்பவும் உற்சாகமாக எடுத்துக்கொண்டு செல்கிறார் பிரியங்கா காந்தி. அதேபோல், ராகுல்காந்தியும்கூட, வெளிநாடு செல்வதற்கு முன்பாகவே பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்கள் மற்றும் ஜெய்ப்பூர் போன்ற இடங்களுக்குச் சென்று தேர்தல் பரப்புரை செய்தார். ஆனால், இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் மோடியின் தயவைக் கருத்திற்கொண்டு, ஊடகம் பெரியளவில் செய்தியாக்கவில்லை. பிரதமர் மோடியோடு ஒப்பிடும்போது, ராகுல்காந்தி தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே தீவிரமாக பரப்புரை செய்துவருகிறார்தான்.”

Also Read: தஞ்சாவூர் மாநகராட்சி: திமுக-வில் சீட் கிடைக்காத அதிருப்தி! -தேர்தலில் சுயேச்சையாக கணவன், மனைவி, மகன்

”தேசிய அளவில், பா.ஜ.க-வுக்கு எதிரான மதச்சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் காங்கிரஸ் ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லையே?”

”எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும்போது, அந்த ஒவ்வொரு கட்சிகளுக்கும் சில விருப்பங்கள் இருக்கின்றன. எனவே, ‘காங்கிரஸ் தலைமையில் எல்லோரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்’ என்று நினைப்பதற்குப் பதிலாக, ‘ஒற்றை நாயனம்’ என்று தனியே வாசிக்க ஆசைப்படுகிற கட்சிகள் சில இருக்கின்றன. இதை மகாராஷ்டிரா ஆளுங்கட்சியான சிவசேனா ரொம்பத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

நரேந்திர மோடி – ராகுல் காந்தி

அதாவது, ‘பா.ஜ.க அல்லாத ஓர் இந்தியாவை உருவாக்கவேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே சொல்லிவருகிறது. இந்த நிலையில், ‘பா.ஜ.க அல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும்’ என்றுதான் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சொல்லவேண்டுமே தவிர…. ‘காங்கிரஸ் கட்சி அல்லாத ஓர் எதிர்க்கட்சி வரிசையை உருவாக்குவோம்’ என்று மம்தா பானர்ஜி போல் சொல்ல நினைத்தால், அது பா.ஜ.க-வுக்குத் துணை நிற்பதாகவே ஆகிவிடும் என்று சிவசேனாவின் அதிகாரபூர்வ இதழில் தலையங்கமாகவே எழுதியிருக்கிறார்கள். ஆக, உங்களது கேள்விக்கு காங்கிரஸ் தரப்பிலிருந்து நான் பதில் சொல்வதைவிடவும், சிவசேனாவின் இந்தக் கருத்தைப் பதிலாக்குவதுதான் சிறப்பு.”

Also Read: “மசோதாவைத் திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது!” – ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 4-வது இடத்தில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகின்றனவே…?”

”பொதுவாக கணிப்புகள் என்பது உண்மையாக இருப்பதில்லை. அதுவும் வட மாநிலங்களுக்கான தேர்தல் கணிப்புகள் என்பது உண்மைத்தன்மைக்கு அப்பாற்பட்டே இருந்துவருகின்றன. பிரியங்கா காந்தியின் பரப்புரையை அடுத்து, உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி நல்லதொரு எழுச்சியைப் பெற்றிருக்கிறது. பொதுமக்களிடமும் விளிம்புநிலை மக்களிடமும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய ஆதரவு நிலை உருவாகியிருக்கிறது. எனவே, இந்தத் தேர்தலில், எங்களுடைய வெற்றி கணிசமானதாகவே இருக்கும்.”

பிரசாந்த் கிஷோர்

”தேர்தல் அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியதுபோல், பா.ஜ.க-வின் பலம் குறித்து கணிக்கத் தவறிவிட்டாரா ராகுல்காந்தி?”

”பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சிக்கு ஆலோசகராக வர விரும்பினார். அதற்காக அறிக்கை கொடுத்தார், காங்கிரஸ் கட்சியின் தலைவர்களையும் சந்தித்தார். ஆனாலும்கூட காங்கிரஸ் கட்சி அவருடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவருக்கு காங்கிரஸ் கட்சி மீது ஒரு வருத்தம் இருந்து வருகிறது. எனவேதான், ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக விமர்சனம் செய்துவந்தவர் இப்போது எதிராக விமர்சனம் செய்துவருகிறார். எனவே, பிரசாந்த் கிஷோர் கருத்துக்கு நாமும் முக்கியத்துவம் தரத் தேவையில்லை.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.