படிப்பா முக்கியம்.. "காவி"க்கு எதிராக களம் குதித்த "நீலம்".. கலர் கலராக போராடும் மாணவர்கள்!

கர்நாடக கல்லூரி மாணவர்கள் படிப்பைத் தூக்கி 2வது இடத்தில் வைத்து விட்டார்கள் என்று தோன்றுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளுக்கு எதிராக காவி அணிந்து போராடும் இந்து மாணவர்களுக்கு எதிராக
நீலத் துண்டு
அணிந்து
தலித் மாணவர்கள்
போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கர்நாடக கல்வி நிறுவனங்களில் மத ரீதியிலான போராட்டங்கள் வெடித்துள்ளது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியைச் சேர்ந்த பைந்தூர் அரசு பியூசி கல்லூரியில் படித்து வரும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் எனப்படும் பர்தா அணிந்து வகுப்புகளுக்கு வர அந்த கல்லூரி நிர்வாகம் திடீரென தடை விதித்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதை கண்டித்து மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் குதித்தனர்.

இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிவது என்பது அவர்களது மத சம்பிரதாயம் ஆகும். காலம் காலமாக இது நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்லூரியில் திடீரென இதற்குத் தடை விதிப்பது அநீதியாகும் என்று போராட்டத்தில் குதித்தனர் மாணவிகள்.

இந்த நிலையில் இஸ்லாமிய மாணவிகளின் போராட்டத்திற்கு எதிராக இந்து மாணவர்கள் காவி துண்டு அணிந்து வகுப்புகளுக்கு வந்து எதிர் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கர்நாடக கல்வித்துறையினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நாடு முழுவதும் இது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

மறுபக்கம் குந்தாப்பூர் ஜூனியர் கல்லூரி, பந்தர்கர் கல்லூரி ஆகியவற்றிலும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக காவித் துண்டு அணியும் போராட்டமும் விஸ்வரூபம் எடுத்தது.

இந்த நிலையில் தற்போது இன்னொரு வகையான போராட்டம் கர்நாடக கல்வி வளாகங்களில் வெடித்துள்ளது. இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதை எதிர்த்து இந்து மாணவர்கள் காவித் துண்டு அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த புதிய போராட்டம் வெடித்துள்ளது. சிக்மகளூரில் உள்ள ஐடிஎஸ்ஜி கல்லூரியில் படித்து வரும் தலித் மாணவர்கள் நீலத் துண்டு அணிந்து கல்லூரி வளாகத்தில் ஜெய் பீம் கோஷத்தை முழங்கியபடி ஊர்வலமாக சென்றுள்ளனர். ஹிஜாப் அணிவது இஸ்லாமியர்களின் உரிமை. அதில் தலையிடும் இந்துத்வா மாணவர்களை கண்டிப்பதாக இவர்கள் கோஷம் போட்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.

படிப்பதை விட்டு விட்டு இப்படி அடுத்தடுத்து கலர் கலர் துண்டுகள் அணிந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால் கர்நாடக மக்கள் பெரும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளனர். கர்நாடக மாணவர்களைப் பார்த்து பிற மாநிலத்தவர் கேலி பேசும் நிலை ஏற்பட்டிருப்பதும் அவர்களை வேதனைப்பட வைத்துள்ளது. விரைவில் இந்த பிரச்சினைகள் முடிவுக்கு வர வேண்டும் என்று பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.