`பிரதமர் ஆசையா, ஆட்சியைத் தக்கவைக்கவா…' – மோடி அரசை சந்திரசேகர ராவ் கடுமையாக விமர்சிப்பது ஏன்?

அதிரடி அரசியலையும் கே.சி.ஆர் என அழைக்கப்படும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவையும் பிரித்துப் பார்க்கமுடியாது. தடாலடியான பேச்சுக்களால் அவரின் பெரும்பாலான பிரஸ்மீட்கள் சரவெடி ரகம்தான். தான் எதிரியாகக் கருதுபவர்களின்மீது வார்த்தை அம்புகளைத் தொடுப்பதில் கே.சி.ஆரை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியை மாநில அரசுகள் குறைக்கவேண்டும் என மத்திய அரசு சொல்ல, அதற்கு “எந்த முட்டாள் வரியை ஏற்றினார்களோ அவர்கள்தான் குறைக்கவேண்டும்” என்கிற கே.சி.ஆரின் பதிலடி தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா முழுவதும் சுற்றி வந்தது.’ பாஜக மத்தியில் இருந்து தூக்கப்பட்டு வங்கக் கடலில் வீசப்பட வேண்டும்’ என பட்ஜெட்டுக்குப் பிறகான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது, ஒட்டுமொத்த பாஜகவினரையும் சூடேற்றியிருக்கிறது.

பிரதமர் மோடி

தவிர, தேர்தல் காலம் வந்துவிட்டால் ரவீந்தரநாத் தாகூர் போலத் தாடி வளர்க்கிறார். தமிழகத்துக்கு போனால் லுங்கி அணிகிறார். பஞ்சாப் சட்டசபைத் தேர்தல் என்றால் டர்பன் கட்டிக் கொள்கிறார். மணிப்பூருக்குப் போனால் மணிப்பூர் தொப்பி… உத்தரகாண்ட் போனால் உத்தரகாண்ட் தொப்பி.. இதுமாதிரி எத்தனை தொப்பிகளைத்தான் போடுவாரோ என பிரதமர் மோடியையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறார் கே.சி.ஆர். இரண்டு நாள்களுக்கு முன் பிரதமர் மோடி தெலங்கானா வந்த போது போது கூட, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவரை சந்திக்கவில்லை. அவரின் இந்த பாணி வழக்கமானதுதான் என்றாலும், பாஜகவின், பிரதமர் மோடியின் மீதான கே.சி.ஆரின் எதிர்ப்பு, சமீபத்தில் தீவிரமடைந்திருப்பதற்கான பின்னணி என்ன?

காங்கிரஸுல் தன்னுடைய அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி, தெலுங்கு தேச ஆட்சியில் அமைச்சர் தொட்டு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் கே.சி.ஆர். தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கைக்காக 2001-ல் தெலங்கனா ராஷ்டிரிய சமிதி எனும் கட்சியைத் தொடங்கினார். பல ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு, 2014-ல் தனி மாநிலத்தையும் அடைந்து தனது தலைமையில் ஆட்சியையும் அமைத்தார் கே.சிஆர். ஆனால், ஐந்தாண்டுகள் முழுமையடைவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பாகவே சட்டசபையைக் கலைத்து தேர்தலில் பங்கேற்று மாபெரும் வெற்றியைப் பெற்றார் கே.சி.ஆர். முதல் தேர்தலில் பெற்றதைவிட மகத்தான வெற்றி. எங்கே, 2019-ல் நாடாளுமன்றத் தேர்தலோடு, தெலங்கானா மாநில சட்டசபைத் தேர்தலும் நடந்தால், தேசியக் கட்சிகள் மாநிலத்தில் செல்வாக்கு பெற்றுவிடுவார்கள் என நினைத்து முன்பே தேர்தலை நடத்தி அதில் வெற்றியும் பெற்றார் கே.சி.ஆர்.

தெலங்கானா

தொடர்ந்து, இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரான உடனேயே தேசிய அரசியலில் காலூன்ற வேண்டும் என்கிற எண்ணம் பிறந்தது சந்திரசேகர ராவுக்கு. அதற்காக, கட்சியில் அவரின் மகனான ராமராவை செயல்தலைவராகவும், ஆட்சியில் முக்கிய மூன்று துறைகளுக்கு அமைச்சராகவும் ஆக்கினார். தொடர்ந்து, மூன்றாவது அணி அமைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். மம்தா, தேவகவுடா, அகிலேஷ் யாதவ், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், கருணாநிதி, ஸ்டாலின் என அனைத்துத் தலைவர்களையும் சந்தித்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவரின் மூன்றாவது அணி கனவு கைகூடாமல் போனது. இந்தநிலையில், தற்போது மிகத் தீவிரமாக மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சித்து வருகிறார் சந்திரசேகர்ராவ்.

Also Read: மூன்றாவது அணிக்கான அச்சாரம்… சந்திரசேகரராவ் – ஸ்டாலின் சந்திப்பு பயன்தருமா?!

சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர்,மத்திய அமைச்சர், மாநில முதல்வர் என பல்வேறு பதவிகளில் அமர்ந்துவிட்ட கே.சி.ஆரின் கனவாக தற்போது பிரதமர் நாற்காலி இருக்கிறது. மூன்றாவது அணி அமைந்தால் மட்டுமே அது சாத்தியம் எனவும் நினைக்கிறார். பிரதமருக்கான ஆசையில் பல மாநிலக் கட்சித் தலைவர்கள் இருந்தாலும் தான் மிகவும் தைரியமானவன் என்கிற தோற்றத்தைத் தர விரும்புகிறார். மத்தியில் ஆளும் பாஜகவையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சிப்பதன்மூலம் தேசிய அளவில் கவனம் பெறலாம் எனவும் நினைக்கிறார் கே.சி.ஆர். தெலுங்கு மட்டுமல்லாமல், ஆங்கிலம், இந்தி, உருது என பல மொழிகள் தெரிந்தவர். இதன்மூலம், இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்டுவதற்கு தன்னுடைய இந்த மொழியறிவு உதவும் என நினைக்கிறார். தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகாரின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்களைச் சந்தித்து வருகிறார். விரைவில் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவையும் சந்திக்கவிருக்கிறார்.

சந்திரசேகர ராவ் – ஸ்டாலின்

மத்தியில் கோலோச்ச வேண்டும் என்கிற தன் ஆசை ஒருபுறமிருக்க, மாநிலத்திலும் பாஜக வேகமாக வளர்ந்து வருவதை கே.சி.ஆர் சுத்தமாக விரும்பவில்லை. எங்கே 2023-ல் நடக்கவிருக்கிற தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில், பாஜக தங்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடுவார்களோ என்கிற எண்ணம் அவருக்கு இருக்கிறது. அதனால்தான் பாஜக எதிர்ப்பை தீவிரப்படுத்திக்கொண்டே வருகிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகள் கவிதாவை பாஜக தோற்கடித்தது, தன் மந்திரிசபையில் இருந்த எட்டலா ராஜேந்தர் (Etela Rajender) பாஜகவில் இணைந்தது ஆகியவை ராவை இவ்வாறு தடாலடியான எதிர்ப்பைக் கையில் எடுக்க வைத்திருக்கிறது என்கிற கருத்தையும் அரசியல் ஆர்வலர்கள் முன்வைக்கின்றனர். இன்னும் சிலரோ, பாஜக-வுக்கு எதிரானவர்கள், காங்கிரஸ் பக்கம் அணி சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக பி டீமாகக் களமிறக்கப்பட்டிருக்கிறார் சந்திரசேகர ராவ் என்கிற விமர்சனங்களையும் அவர்மீது தொடர்ச்சியாக முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் எது உண்மை என்பதற்குப் பதில் காலம்தான் சொல்ல வேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.